கூடலூர்: முல்லை பெரியாறு அணயில் உள்ள தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், தமிழக அதிகாரிகள் தங்கி பணியாற்றி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் அம்மாநில சட்டசபையில் பேசுகையில், ‘‘பெரியாறு அணையில், தமிழகத்திற்கு தனி செயற்பொறியாளர் உள்ளார். ஆனால், கேரளாவுக்கு இல்லை. இதனால், அணையின் நீர்வரத்து, நீர்வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை தமிழகத்திடமிருந்து கேட்டுப் பெற வேண்டியுள்ளது. எனவே, பெரியாறு அணைக்கு கேரளா தனி செயற்பொறியாளர் நியமிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கேரள நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் வல்லக்கடவு வழியாக முல்லை பெரியாறு அணைக்கு சென்றார். அங்கு மெயின் அணை, ஷட்டர் பகுதியை பார்வையிட்டு திரும்பினார். அவருடன் செயற்பொறியாளர் ஹரிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். பெரியாறு அணைக்கு தனி செயற்பொறியாளர் நியமிக்க வேண்டும் என கேரள அமைச்சர் சட்டசபையில் அறிவித்த நேரத்தில், கேரள பொறியாளர் அணையில் ஆய்வு செய்தது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அதிகாரிகளிடம் கேட்போது, ‘‘அணையைப் பார்க்க வந்தார்கள். வேறொன்றும் இல்லை’’ என்றனர்.
