‘தற்பொழுது உள்ள இயக்குநர்கள் தங்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்துகிறார்கள்” – அமீர்

தற்போது வரும் இயக்குநர்கள், திரைப்படங்களில் தங்களது சாதி, மதங்களை அடையாளப்படுத்துவதை விரும்புகின்றனர் என்று இயக்கு அமீர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கதையை, இயக்குநர் அமீர் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்குகிறார். இதற்கான அறிமுக விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் சூரி நடிக்கிறார். 

இந்த விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “இயக்குனர்கள் வேறு ஒருவரின் கதையை வாங்கி திரைப்படமாக்க வேண்டும். இருவரின் சிந்தனைகள் ஒன்று சேரும்போது அந்தக் கதைக்கு வேறு ஒரு பரிணாமம் கிடைக்கும். தமிழ் சினிமாவில் தற்போதைய இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்கள் மூலம் தங்களுடைய சாதி, மதங்களை அடையாளப்படுத்த நினைக்கின்றனர். ஆனால், அதை யாரும் விரும்புவதில்லை. அதற்கு தொடக்கப் புள்ளியாக இந்த முயற்சியை எடுத்திருக்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.

image

மேலும், அவர் புதிய தலைமுறைக்கு அளித்தப் பேட்டியில், “இறைவன் மிகப்பெரியவன் திரைப்படம் சமத்துவத்தைப் பற்றி பேசுகிறது. சமூகத்தில் வார்த்தைகளில் கூட மதம் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. God என்றால் கிறிஸ்துவன், அல்லா என்றால் இஸ்லாமியன், சாமி என்றால் இந்து என இங்கு பார்க்கப்படுகிறது. கடவுள்களில் வேறுபாடு கிடையாது. இங்கு அனைத்தும் அரசியலாக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் ஹிஜாபை முன்வைத்து நடைபெற்றுவரும் பிரச்சனை அரசியல். சீருடையை வரவேற்கிறேன். ஏழை, பணக்காரன், சாதி, மதம் என இல்லாமலிருப்பது சீருடை. அதற்காகவே அது கொண்டு வரப்பட்டது.

அதில் எந்த சமரசமும் கிடையாது. சீருடை என்பது சீர்திருத்தம். ஆனால் அதை பிறப்பில் ஏற்றத்தாழ்வுகளை பார்ப்பவர்கள் பேசுகிறார்கள். இவை அனைத்தும் தேர்தலை நோக்கிய நகர்வு. அவர்களுக்கு தேர்தலில் சொல்லிக் கேட்பதற்கு ஒன்றுமில்லை. அதன் காரணமாக இருவருக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்தி பிரச்னையாக பார்க்கின்றனர். இது முழுக்க முழுக்க தேர்தலுக்காக செய்யப்படுவது. அரசியல்வாதிகளை விட நீதிமன்றங்களை நினைத்து வருத்தப்படுகிறேன். இந்த பிரச்சனையை எப்படி நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” என கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.