“முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தா, என் ஆட்டமே வேற..!" – ஹேம மாலினி ஷேரிங்ஸ்

`பாலிவுட்டில் கால் பதித்துவிட வேண்டும்…’ – இந்திய சினிமா கலைஞர்கள் பெரும்பாலானோருக்கும் இந்த ஆசை இருந்தாலும், அந்தக் கனவு, திரையுலகில் முத்திரை பதிக்கும் சிலருக்கே நனவாகும். அந்தப் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்திலுள்ள ஹேம மாலினி, தென்னிந்திய சினிமாவிலிருந்து சென்று பாலிவுட்டில் கோலோச்சியவர்.

ஹேம மாலினி

பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் ஜோடியாக நடித்தும், நடனத்திறமையாலும் ரசிக்க வைத்ததுடன், அடிதடி, சண்டைக்காட்சிகளிலும் நடித்து ஆச்சர்யப்படுத்தியவர். தமிழில் ஹிட் அடித்த `அன்னை ஓர் ஆலயம்’, `வாணி ராணி’, ‘குரு’ போன்ற பல படங்கள், இவர் நடிப்பில் வெளியான இந்திப் படங்களின் ரீமேக்தான். சினிமாத்துறையில் 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் ஹேம மாலினியிடம், சினிமா, அரசியல், பர்சனல் குறித்துப் பேசினோம்.

“ஸ்கூல் படிச்ச ஆரம்பகாலத்துல டெல்லியில வளர்ந்தேன். டான்ஸ்ல ஆர்வம் கொண்ட என் அம்மாகிட்ட பயிற்சி எடுத்ததுடன், ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் பலரின் முன்னிலையிலும் நடனமாடியிருக்கேன். எங்க குடும்பத்துல யாரும் சினிமாவுல இல்ல. ஆனாலும், நடனத்துல சிறந்து விளங்கிய வைஜெயந்திமாலா, பத்மினி போன்ற சிலர் சினிமாவுலயும் புகழ்பெற்றதுபோல, நானும் ஆகணும்னு என் அம்மா ஆசைப்பட்டாங்க.

குடும்பத்தினருடன் ஹேம மாலினி

எங்க ஐயங்கார் குடும்பத்துல கண்டிப்பு அதிகம் இருக்கும். `சினிமா வேலையெல்லாம் நமக்கு ஒத்துவராது’னு வீட்டுல எழுந்த எதிர்ப்பையும் அம்மாதான் சமாளிச்சாங்க. தனிப்பட்ட முறையில எனக்கு விருப்பம் இல்லாட்டியும், அவர் விருப்பத்துக்காக சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சேன். தென்னிந்திய மொழிகள்ல நடிக்க முடிவெடுத்த நிலையில, திடீர்னு நான் பாலிவுட்டுக்குப் போனது தனிக்கதை. ஆனா, என் நல்ல நேரம், பலரும் ஆச்சர்யப்படுற அளவுக்கு இந்தி சினிமாவுல கடகடனு வளர்ந்தேன்.

`கிளாசிகல் டான்ஸரா வீட்டுல அதட்டிக்கூட பேசாத நீயா, சினிமாவுல சண்டைக்காட்சிகள்ல அசால்ட்டா நடிக்கிறே’னு என் குடும்பத்தினரே வியந்தாங்க. `உங்க பொண்ணுதானா… அடுத்து என்ன படம் பண்றாங்க..?’னு வொர்க் பிளேஸ்ல என்னைப் பத்தி என் அப்பாகிட்ட பலரும் கேட்டுத் தொந்தரவு செஞ்சதாலயே, ஒருகட்டத்துல அவர் விருப்ப ஓய்வு வாங்கிட்டார். `உன்னால என் வேலையே போச்சு’ன்னு அடிக்கடி தமாஷா கிண்டல் பண்ணுவார்.

வைஜெயந்திமாலாவுடன் ஹேம மாலினி

சினிமாவுக்கு வர்றத்துக்கு முன்னாடி, வைஜெயந்திமாலா அக்காதான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவங்க டான்ஸை கண்ணிமைக்காம பார்த்து ரசிச்சிருக்கேன். என் சின்ன வயசுல அவரை எப்படியாச்சும் பார்க்கணும்னு ஆசைப்பட்டு, ஒருமுறை சந்திச்சுப் பேசினேன். நான் சினிமாவுக்கு வந்த பிறகு, சிலமுறை அவரை சந்திச்சிருக்கேன். என்மேல அக்காவுக்கும் அதிக அன்பு உண்டு. அதுக்கப்புறமா, இவரை சந்திச்சா நல்லாயிருக்கும்னு ஆசைப்பட்டு, அதுக்காக நான் முயற்சி எடுத்தது ஒருமுறை மட்டும்தான்…” – சஸ்பென்ஸுடன் இடைவெளிவிடுபவர், முக்கியமான பிரபலத்துடன் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற அந்தச் சந்திப்பு குறித்துப் பேசினார்.

“அந்த நபர் வேறு யாருமில்லை, ஜெயலலிதாதான்! `வெண்ணிற ஆடை’ படத்துல முக்கியமான ரோல்ல நடிக்க நான் கமிட்டாகி, அதுக்கப்புறமா இன்னொரு ஆர்ட்டிஸ்ட் அந்த ரோல்ல நடிச்சாங்க. அந்த நேரத்துல சில நாள்கள் நான் நடிச்சப்போ, என்கூட ஜெயலலிதாவும் நடிச்சாங்க. அந்தப் படத்துல எங்க ரெண்டு பேரின் காட்சிகளையும் ஒரே நேரத்துல மாத்தி மாத்தி எடுத்தாங்க. அப்போ சம்பிரதாயமா அவரும் நானும் சில வார்த்தைகள் பேசிகிட்டதுதான். அதுக்கப்புறமா அவங்க தமிழ்லயும் நான் இந்தியிலும் பிஸியா நடிச்சபோதும், எந்த விதத்துலயும் எங்களுக்குள் பேச்சுவார்த்தையே இல்லை.  

Hema Malini

அவர் முதன்முறையா முதலமைச்சரா ஆன பிறகு, மரியாதை நிமித்தமா ஜெயலலிதாவைச் சந்திக்க ஆசைப்பட்டேன். அதுக்கான வாய்ப்பும் அமைஞ்சது. என் அம்மாவுடன் போய் பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை வாழ்த்தினேன். என் படங்கள் பத்தி மனம் திறந்து பாராட்டினார். அவ்ளோதான்! அதுக்கப்புறமா எந்த வகையிலும் எங்களுக்குள் பரஸ்பர விசாரிப்புகள் ஏதும் நடக்கலை” என்பவர், 2004-ல் அரசியலுக்கு வந்து, ஆறு ஆண்டுகள் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார். தேர்தல் அரசியலிலும் களமிறங்கி, உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பு வகிக்கிறார்.

“பா.ஜ.க-வுல இருந்த என் நண்பரும் இந்தி நடிகருமான வினோத் கன்னாவுக்கு ஆதரவா ஒருமுறை தேர்தல் பிரசாரத்துல ஈடுபட்டேன். என் பேச்சைக் கேட்க லட்சக்கணக்கானோர் கூடினாங்க. பிறகு, `பா.ஜ.க-வுல இணைஞ்சு வேலை செய்ங்க’ன்னு வாஜ்பாய் சார் உட்பட பலரும் அழைப்பு விடுத்ததால, பா.ஜ.க-வுல சேர்ந்தேன். சினிமா அளவுக்கு அரசியல்ல எனக்குப் பெரிசா அனுபவம் இல்லாட்டியும், இந்தப் பயணமும் நல்லபடியா போகுது.

பிரதமர் மோடியுடன் ஹேம மாலினி

Also Read: `முதல்ல அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாமதான் இருந்தேன்; ஆனா, அப்புறம்..?!” – சரண்யா மோகன்

சினிமா மாதிரியே அரசியல்லயும் புகழ்பெறணும்னு நான் வைராக்கியமா முடிவெடுத்திருந்தா, நிச்சயமா முதலமைச்சரா கூட ஆகியிருப்பேன். அந்த எண்ணம் எனக்கு இருந்திருந்தா, என் ஆட்டம் வேற மாதிரிதான் இருந்திருக்கும். ஆனா, அதுல எனக்குப் பெரிசா நாட்டமில்ல” என்றவர், இறுதியாகப் பகிர்ந்தது, சொந்த ஊர் நினைவுகள் குறித்து.

“என் தம்பி மகாராஷ்டிராவுல வசிக்கிற நிலையில, என் அண்ணன் குடும்பம் சென்னையில இருக்கு. அதனால, சென்னை வந்தா, அண்ணன் குடும்பத்தினருடன் தமிழ்லதான் பேசுவேன். என் கணவருக்கு ஒருசில தமிழ் வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கேன். அவரும் அவ்வப்போது சென்னை வருவார். ரவா இட்லி, ரசம், மைசூர் பாக் உட்பட நம்மூர் டிஷ் பலவும் என் கணவருக்கு ரொம்ப இஷ்டம்.

கணவர், மகள்களுடன்…

Also Read: “15 வயசுல கல்யாணம்; 3 குழந்தைகளுடன் தனி மனுஷியா என் கஷ்டங்கள்..!” – செளகார் ஜானகி ஷேரிங்ஸ்

அதனாலேயே, தென்னிந்திய சமையற்கலைஞர்களைத்தான் எங்க வீட்டுல வேலைக்கு வெச்சிருக்கோம். நானும் நல்லாவே சமைப்பேன். மும்பையிலேயே குடியேறிவிட்டாலும், நான் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டுடன் தொடர்புடைய பல விஷயங்களையும் மறக்காம கடைப்பிடிக்கிறேன்” என்று சந்தோஷத்துடன் முடித்தார்.

ஹேம மாலினியின் விரிவான பேட்டியை, தற்போதைய அவள் விகடன் இதழில் படிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.