9 மணி நிலவரம்.. கோவா சட்டசபை தேர்தலில் 11.04 சதவீதம் வாக்குப் பதிவு
பனாஜி: பனாஜி: கோவா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி இதுவரை 11.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த 40 தொகுதிகளுக்கு மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். கோவாவில் மொத்தம் 11.6 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

அவர்களில் 9,590 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2997 பேர் உள்ளனர். 41 பேர் பாலியல் தொழிலாளர்கள், 9 பேர் திருநங்கைகள் உள்ளனர். கோவா மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன் தினம் முடிவடைந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும், காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது.
அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது. இந்த மாநில சட்டசபையின் பெரும்பான்மை பலம் 21 ஆகும். இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உள்ளூர் கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.
உ.பி.தேர்தல் 2022: இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. 55 தொகுதிகளுக்கு 586 பேர் போட்டி
இதையடுத்து இந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தங்கள் வசம் இழுத்து கொண்டது. மற்றவர்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் வலை விரித்துக் கொண்டது. கோவா சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
கோவா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒற்றை இலக்க வெற்றி கிடைக்கும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கோவாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
கோவாவில் போதை பொருட்கள், சுற்றுலா துறை, சுரங்கத் தொழில் உள்ளிட்ட விவகாரங்களுக்கு மத்தியில் சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக 105 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கூடுதலாக 80 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. கொரோனா பாதித்த வாக்காளர்களும் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தேர்தல் முடிவுகள் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும்.
9 மணி நிலவரப்படி கோவா சட்டசபை தேர்தலில் 11.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.