IPL Auction 2022: எல்லைச்சாமி சிஎஸ்கேவுக்கு இல்லை சாமி… டு ப்ளெஸ்ஸி இல்லாத சென்னை, இனி எப்படி?!

பொதுவாக, தன்னுடைய அணியைச் சேர்ந்த வீரர் என்பதை ஒட்டி ஏற்படும் வீரர்களுடனான ரசிகர்களின் மனநெருக்கம், சமயத்தில் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கும். தங்களது அணியில் அவர்களுடைய எழுச்சியினை, சாதனையை, அணிக்கு அவர்கள் ஈட்டித் தந்த பெருமையினை, புல்லரிக்க, கண்கள் வேர்க்கக் கொண்டாடி, அணுஅணுவாய் ஆராதித்தவர்களுக்கு, அவர்களை வேறு அணிக்குள் பொருத்திப் பார்க்க வேண்டிய சூழல் வரும் போது, அது ஆறாத வலியினை நெஞ்சினில் ஏற்படுத்தும்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகள், இணைந்து பயணித்த பார்சிலோனைவை விட்டு மெஸ்ஸி வெளியேறிய போது, எந்தளவு அவரது ரசிகர்களும், பார்சிலோனா ரசிகர்களும் உடைந்து அழுதார்களோ, அதே மனவேதனையில்தான், சிஎஸ்கே ரசிகர்களும், இம்முறை டு ப்ளெஸ்ஸியைத் தவறவிட்டதற்காக வருந்துகின்றனர். கடந்தாண்டு கோப்பையை சிஎஸ்கே வென்ற இறுதிப் போட்டி, அவர் ஆடிய 100-வது ஐபிஎல் போட்டி. அந்தப் போட்டியே, சிஎஸ்கேயில் அவரது ஃபேர்வெல் மேட்ச் ஆகும் என்றோ, ஆக்ஷன் மேடையே அவருக்கான பிரிவு உபச்சார விழாவாக மாறும் என்றோ, ரசிகர்கள் யாருமே பெரிதாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

Faf du plessis

டு ப்ளெஸ்ஸிக்கும், சிஎஸ்கேவுக்குமான பந்தம், கிட்டத்தட்ட ஒரு தசம வரலாறுடையது. 2011-க்குப் பின், சிஎஸ்கேவின் தடைக்கு முன்னதாக இருந்த காலகட்டத்திலும் சரி, தடைக்குப் பிந்தைய காலகட்டத்திலும் சரி, சிஎஸ்கேவுடனேதான் அவரது ஐபிஎல் பயணம் முழுமையும் அமைந்தது. அதுவும் “தோனி இருக்குமிடத்தில் எல்லாம் டு ப்ளெஸ்ஸியும் இருப்பார்” எனுமளவு, இடைக்காலத்திலும், புனே அணியிலும் இருவரும் இணைந்தே இருந்தனர். கெய்க்வாட் கூட ஒருமுறை, “டு ப்ளெஸ்ஸி, சிஎஸ்கேயின் பொக்கிஷம், தோனிக்கும் அவருக்குமான பந்தம் மிக அற்புதமானது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரெய்னா, ஜடேஜா, பிராவோ என மற்ற சிஎஸ்கே வீரர்களைப் போலவே, 2010-க்குப் பின், அணியுடனான அவரது பிணைப்பு இன்னமும் வலுவானது. தோனிக்கு அடுத்தபடியாக, இவர்கள்தான் சிஎஸ்கேயின் அடையாளமே! அதிலும், 100 ஐபிஎல் போட்டிகளில் டு ப்ளெஸ்ஸி ஆடியிருக்கிறார்; அதிலும், 93 போட்டிகளில், சிஎஸ்கேவுக்காகவே ஆடியிருக்கிறார் என்பதுதான், டு ப்ளெஸ்ஸியை இன்னமும் தனித்தன்மை உடையவர் ஆக்குகிறது.

சென்ற ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்திருந்த வீரரின் இடத்தை, இளம்வீரரான கெய்க்வாட் ஆக்கிரமித்து, ஆரஞ்சுக் கேப்பை வாங்கினார் என்றால் வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில்தான் (633 ரன்கள்) டு ப்ளெஸ்ஸி அதனைத் தவற விட்டிருந்தார்‌. சிஎஸ்கேயின் ஓப்பனர்களாக ஹெய்டன், ஹசி, வாட்சன் என ஆஸ்திரேலிய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அந்த இடத்தில் ராஜசிம்மாசனமிட்டு ஆட்சி செலுத்தியவர் டு ப்ளெஸ்ஸி. குறிப்பாக, சிஎஸ்கேவிற்காக குறைந்தது 50 போட்டிகளுக்கு மேல் ஆடிய வீரர்களது சராசரியை எடுத்துப் பார்த்தால், டு ப்ளெஸ்ஸிக்கு முன்னதாக அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்கள் ஹசியும் தோனியும் மட்டும்தான்.

டு ப்ளெஸ்ஸி, எங்கிடி

அணிக்காக அவர் எடுத்த 2722 ரன்களை விடவும், அவர் ஏற்படுத்தி வைத்திருந்த தாக்கமும், எதிரணியிடம் அவர் ஏற்படுத்தி வைத்திருந்த நடுக்கமும்தான் முக்கியமானது. 2012-ம் ஆண்டு, ஆர்சிபிக்கு எதிராக நடைபெற்ற போட்டியை சிஎஸ்கே ரசிகர்கள் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த அப்போட்டியில், 206 ரன்களை டார்கெட்டாக வைத்து கிட்டத்தட்ட வென்று விடுவோம் என்ற இறுமாப்போடுதான் இருந்தது ஆர்சிபி. ஆனால், சந்தித்த 46 பந்துகளையும் இரக்கமின்றி பறக்கவிட்டு 71 ரன்களை டு ப்ளெஸ்ஸி குவிக்க, இறுதி ஓவர்களில் தோனி, மார்கல்லின் கேமியோக்கள் கைகொடுக்க, மிகச்சரியாகக் கடைசிப் பந்தில் வெற்றியைச் சொந்தமாக்கியது சிஎஸ்கே. எட்ட வேண்டிய இலக்கு எவ்வளவாக இருந்தாலும் ஓப்பனர்கள் பவர்பிளேயைப் பார்த்துக் கொண்டால் ரசிகர்களது நகங்களை எல்லாம் காலி செய்தாவது கடைசி நிமிடம் மாயம் செய்து விடுவார்கள் சிஎஸ்கே வீரர்கள். அந்தளவிற்கு எந்த இலக்கையும் எட்டி விடலாம் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மனதில் அளவின்றி பெருக்கெடுக்கச் செய்ததில் முக்கிய பங்கு, டு ப்ளெஸ்ஸியுடையது.

அவரது அந்த ஹை பேக் லிஃப்டும், பந்தை அவர் பவுண்டரிக்கு அனுப்பி வைக்கும் லாகவமும், அடித்த மாத்திரத்தில் தயங்காமல் விக்கெட்டுகளுக்கு இடையே அவர் ஓடி ரன் எடுக்கும் விதமும் என ஒவ்வொன்றையுமே சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தவர்கள். 2015 சீசன் வரைகூட, டு ப்ளெஸ்ஸி மீது அத்தனை ஈர்ப்பு ஏற்படவில்லை. களங்கத்தோடு சென்ற சிஎஸ்கே, அந்த அக்னிப் பரிட்சையைக் கடந்து, ஃபீனிக்ஸாகத் திரும்ப வந்த போது கூட்டிற்குத் திரும்பும் தாய்ப்பறவையைப் பார்த்தது போன்ற ஆனந்தம்தான் ரசிகர்கள் மனதில் நிரம்பி வழிந்தது. அதுவும் பழைய வீரர்கள், அணிக்குள் திரும்பப் படையெடுத்த பொழுதுதான், “இவர்கள் எங்களுடையவர்கள்!” என்ற எண்ணம் இன்னமும் அதிகமானது. டு ப்ளெஸ்ஸி மீது கூடுதலான அபிமானம் உண்டாகத் தொடங்கியதும் இந்தக் கால கட்டத்திற்குப் பிறகுதான். அதிலும் 2018-ல் கூட, ஓவர்சீஸ் வீரர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட வேண்டிய காரணத்துக்காக பல போட்டிகளில் டு ப்ளெஸ்ஸி வெளியே உட்கார வேண்டிய நிலைதான் இருந்தது.

ருத்துராஜ் மற்றும் டு ப்ளெஸ்ஸி

ஆக, சிஎஸ்கேயில் தனது உச்சகட்ட பங்களிப்பை டு ப்ளெஸ்ஸி அளித்தது, கடந்த இரண்டு ஆண்டுகளிலும்தான். 2020 – சிஎஸ்கே அணி, தனது களவரலாற்றில் அழிக்க விரும்பும் ஆண்டு. பேட்ஸ்மேன்கள், பௌலர்கள், ஆல் ரவுண்டர்கள் என யாராலும், அணியை வெல்ல வைக்கக்கூடிய ஆட்டத்தை ஆட முடியவில்லை. ஒரு சில போட்டிகளில் ஆடிய ஓப்பனர்களில் ஒருவரான வாட்சன் கூட, தனது கரியரின் இறுதிப் பகுதியான அக்காலகட்டத்தில் ரொம்பவே சொதப்பினார். அவருக்கு மாற்று வீரராக வந்த கெய்க்வாட்டுக்குக்கூட ஆரம்பத்தில் சாதிக்க முடியவில்லை. ஆனால், மறுபுறம் அதகளம் காட்டினார் டு ப்ளெஸ்ஸி. அந்த வருடம், 449 ரன்களை, அவரது பேட் குவித்தது. குறிப்பாக, அதற்கு முந்தைய சீசன்களில் 2012-ஐ தவிர்த்து வேறு எந்த வருடமும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 130-ஐ தாண்டியதில்லை. ஆனால், 2020-ல் ரன்கள் சேர்க்க பேட்ஸ்மென்கள் அத்தனை பேரும் திணறிய அரபு மண்ணில் 141 ஸ்ட்ரைக் ரேட்டோடு ரன்களைச் சேர்த்திருந்தார். அதிலும், ஸ்பின்னர்களின் பந்துகள் அவரைத் திக்குமுக்காடச் செய்யும் என்ற பரவலான கேலிகளை அந்த சீசனில் அடித்து தூள் தூளாக்கி இருந்தார்.

பேட்டிங்கில் மட்டுமில்லை, ஃபீல்டிங்கிலும் ‘எல்லைச்சாமி’ என ரசிகர்கள் புனைப்பெயர் இட்டு அழைக்குமளவு இவரைத் தாண்டிச் செல்ல பந்துக்கு இவர் விசா வழங்கியதில்லை. ஏரோபிக்ஸில் இருந்து டைவிங் பயிற்சி வரை அத்தனையும் எடுத்து வந்தவர் போல் ஓடி, தாவி, விழுந்து, எழுந்து, எப்படியாவது பந்தைத் தடுத்து விடுவார். 37 வயதா அல்லது அண்டர் 19 ஃபீல்டரா எனுமளவுதான் துடிப்பு அவரிடத்தில் நிரம்பக் காணப்படும்.

இவ்வளவுக்கும், தனது இருப்பை அறிவித்துக் கொள்ளுமாறு எந்தவிதச் செயல்களையும் அவர் செய்ததில்லை. ஆனால், அணிக்கு எல்லாமுமாக சத்தமே இல்லாமல் சாதித்த அவரை நோக்கி ரசிகர்களது கவனமும் காதலும் தானாகவே திரும்பிவிட்டன.

டு ப்ளெஸ்ஸி

இந்த மெகா ஏலத்துக்காக சிஎஸ்கே அவரை விடுவித்த போதுகூட, எப்படியும் திரும்ப வந்து விடுவார் என்றேதான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். டு ப்ளஸ்ஸிஸ், பிராவோ, தாக்கூர், தீபக் சஹார் என திரும்ப அழைத்து வரப்பட வேண்டிய ஸ்டார் வீரர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், சிஎஸ்கேயின் கையிருப்புப் பணம் குறைவாகவும் இருந்ததனால் ஒரு சின்ன நெருடல் கண்டிப்பாக அவர்களது மனதை ஆக்ரமித்திருந்தது‌. “இம்முறை, டு ப்ளெஸ்ஸியை எடுக்க, அதிக விலையினை சிஎஸ்கே கொடுக்க வேண்டியிருக்கும்” என அஷ்வின் கூறியிருந்ததும், வயிற்றில் அமிலத்தைக் கரைத்தது. நினைத்தது போலவே, வேறு வழியின்றி, டு ப்ளெஸ்ஸிக்கான விலையைக் கொடுக்க முடியாமல், அவரை ஆர்சிபியிடம் தாரை வார்த்துவிட்டது சிஎஸ்கே.

அதே நாளில், பங்களாதேஷ் டி20 லீக்கில், வெறும் 54 பந்துகளில், அவர் அடித்திருக்கும் 101 ரன்களும் சேர்ந்து, சிஎஸ்கே ரசிகர்களை இன்னமும் புண்படுத்தி இருக்கிறது. கையிலிருக்கும் ஒன்று போன பின் அதன் மதிப்பு, மனதில் இன்னமும் அதிகமாகி வெறுமையைக் கொண்டு வருவதுபோல், அவரது ஓப்பனர் ஸ்லாட்டினை நிரப்ப யாரால் முடியும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஏற்படுட்டுள்ளது.

Also Read: IPL Auction 2022: U19 சாம்பியன், அதிரடியான ஆல்ரவுண்டர்… 6.5 கோடிக்கு ஏலம் போன அபிஷேக் சர்மா யார்?

அவர் விட்டுச் சென்றிருக்கும் ஒவ்வொரு நினைவலைகளும் பல ஆண்டுகளுக்கு ரசிகர்களின் மூளைக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியவைதான். 2019 ஐபிஎல்லில், கசிந்த ரத்தத்தோடு வாட்சன் பேட்டிங் செய்ததை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல், கடந்த ஐபிஎல் சீசனில் கேகேஆருக்கு எதிரான போட்டியில் மஞ்சள் கால்சட்டை சிவப்பாக மாறியதோடு, மார்கன் அடித்த பந்தை லாங் ஆனில் நின்று, பாய்ந்து பிடித்ததையோ, அந்த ரத்தத்தைப் பற்றியும் பொருட்படுத்தாமல், பேட்டிங் செய்ய புறப்பட்டு வந்ததையோ எப்படி மறக்க முடியும்?

ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி

கடந்த ஆண்டு முழுவதிலும், கெய்க்வாட்டுடனான அவரது அற்புதமான பார்ட்னர்ஷிப் மறக்க முடியாத ஒன்று. பவர்பிளேயில் ரன் சேர்க்காததுதான் சிஎஸ்கேயின் மைனஸ் பாயிண்ட், முந்தைய தோல்விகளுக்கான காரணமும் அதுதான் என்னும் வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதை எப்படி நினைவுப் பெட்டகத்திலிருந்து நீக்க முடியும்?!

போன சீசனின் இறுதிப் போட்டியில், கோப்பையை வென்று தரும் அந்த வெற்றிகரமான இன்னிங்ஸையும், 59 பந்துகளில் 86 ரன்களை வாரிக் குவித்த அந்த வெறித்தனத்தையும் எப்படி நினைவிலிருந்து அகற்ற முடியும்?

உண்மையில், ஆர்சிபிக்கே சென்றாலும் தங்களுக்கு எதிரான போட்டியில், ஆர்சிபியின் சார்பில் ரன் குவித்தாலும்கூட, ரசிகர்களால் டு ப்ளெஸ்ஸியின் மீது வெறுப்பைக் காட்ட முடியாது. அந்தளவு, சிஎஸ்கேயுடன் இரண்டறக் கலந்து விட்டார் டு ப்ளெஸ்ஸி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.