செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கருவூலத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்: ஓய்வூதிய சங்கத்தினர் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட அரசு கருவூலத்தை முழுமையாக, சரிவர நடத்த வேண்டும் என ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு நிர்வாக காரணங்களால் பிரிக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை பல்வேறு அரசு துறைகள் காஞ்சிபுரத்தில் இருந்து முழுமையாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கொண்டு வரவில்லை. இதனால் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்துக்கான கருவூலம் அமைத்து, ஒரு ஆண்டு கடந்துவிட்டது. ஆனாலும், காஞ்சிபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து  செங்கல்பட்டு மாவட்டத்துக்கான ஆவணங்கள் கொண்டு வரவில்லை. அதில், ஓய்வூதியர்களின் ஆவணங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு வராததால், அவர்கள் ஓய்வூதிய பணப்பயன்கள் பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து ஆவணங்களை செங்கல்பட்டு மாவட்டத்துக்கு  கொண்டு வந்து, கருவூலத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.வேதகிரி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.