இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவர் மக்களிடம் காணொளி வாயிலாக பேசினார். அந்தக் காணொளியை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆனது. நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை இந்த 8 மாத காலத்தில் செய்து முடித்திருக்கிறோம்.

நமது ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை. அப்படியென்றால் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி. புரியும்படி கூற வேண்டுமென்றால் வாய்ப்புகளும், வளங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சரிசமமாக சென்று சேர வேண்டும்.

இதில், ஜாத, மத, பாலின வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது ஆகும்.  அதுதான் உண்மையான உண்மையான வளர்ச்சி. அதுதான் திராவிட சிந்தனை.

நாங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் இதை அடிப்படையாக வைத்துதான் கொண்டு வருகிறோம். பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

பெண்களுக்கு வாய்ப்புகளையும், உரிமைகளையும் அளிக்க அவர்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை கொண்டுவந்தோம்.

தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை என்று அரசாணை வெளியிட்டதால் தமிழக இளைஞர்கள் பலன் பெறுவார்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம் சமூக நீதி என்றால் தமிழ்நாடு தான் என்று இந்தியாவுக்கு காண்பித்தோம்.

பட்டியலின பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு சிறப்புத் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என மக்கள் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் அணுகுமுறையில் முழு மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம்.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலம்காலமாக சொல்லப்பட்டுவந்த பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம்.

இந்த திமுக ஆட்சியில்தான் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,789 கோடி மதிப்பிலான 180 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கோயில் சீரமைப்பு நிதி ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க ஆரம்பித்துள்ளோம். ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்து வருபவர்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் ரத்த அழுத்தம் அதிகமாகதான் செய்யும். என்ன செய்தாலும் தமிழக மக்களின் ஒற்றுமையை எதுவுமே செய்ய முடியவில்லை என்ற வெறுப்பு அவர்களுக்கு ஏற்படச் செய்யும்.

DMK's 8 candidates win unopposed in Negamam town panchayat, Pollachi, Coimbatore, DMK, DMK candidates unopposed win, Local body polls, ஆடாமலேயே ஜெயித்த திமுக, பெரிய நெகமம் பேரூராட்சியில் 8 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு, கோவை, பொள்ளாச்சி, திமுக, பெரிய நெகமம் பேரூராட்சி, tamilnadu, dmk, aiadmk

சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் நமது முயற்சியில் பலவித சவால்களை ஒன்றிய அரசு முன்வைக்கிறது. அதற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால் இந்த  சிக்கலான கொரோனா சமயத்தில் கூட நமக்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,725 கோடியைத்  தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நமக்கு வர வேண்டிய கொரோனா நிவாரண நிதியான ரூ.8,989 கோடியும் நமக்கு தரப்படவில்லை.

இந்த வருடம் மத்திய பட்ஜெட்டை எடுத்துக் கொண்டால் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித சலுகைகளும் உதவிகளும் இல்லை.

மேலும் இந்த பட்ஜெட்டில் முக்கியமான முன்னெடுப்பாக வைரத்துக்கு வரியை குறைத்திருக்கிறார்கள். இதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை குறைத்து அந்த திட்டத்தை கேள்விக் குறியாக்கி விட்டார்கள். இந்த ஆதிக்க அணுகுமுறையின் நீட்சிதான் நீட் தேர்வு.

நிறைய செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்களுக்குத்தான் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இதனால், வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இது மிகப்பெரிய சமூக அநீதி. இதை எதிர்த்து தான் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றினோம்.

அந்த சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதை நமக்கே திருப்பி அனுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்தை தடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை தானே?

ஆனால், முந்தைய ஆட்சி போல் இந்த அநீதிகளுக்கு நாம் துணை போக மாட்டோம். நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

ஒவ்வொரு சவாலையும் போராடி வெல்வோம். நாம் ஒன்றாக இருக்கிறோம். இனியும் ஒன்றாக இருப்போம் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபிப்போம்.

 மாநில உரிமைகளுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உள்ளாட்சியிலும் நமது திமுக ஆட்சி தொடரட்டும். உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்குமாறு உங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  என்றென்றும் உங்களுடன் நான் என்று முதல்வர் ஸ்டாலின் அந்தக் காணொளியில் பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.