உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குறைப்பு: போர் பதற்றம் தணியும் என எதிர்பார்ப்பு

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில், உக்ரைன் எல்லையில் இருந்து சில படைப்பிரிவுகள் தங்கள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், போர் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. இதனால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவ திட்டமிட்டுள்ள தாகவும் இதற்காக தனது படைகளை எல்லையில் குவித்துள்ள தாகவும் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன.

மக்ஸார் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பெலாரஸ், கிரைமியா, மேற்கு ரஷ்யா பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதையும் ராணுவ தளவாடங்களை தயார் நிலையில் வைத்திருப்பதையும் அந்த செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளன. இந்தப் படங்கள் கடந்த 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மிகப்பெரிய படைப்பிரிவுகள் எல்லையை நோக்கி வருவதையும், நவீன ரக ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் குண்டுகளை பொழியும் விமானங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதும் அந்த புகைப்படங்களின் மூலம் தெரியவருகிறது.

இன்னும் சில நாட்களில் உக்ரைனுக் குள் ரஷ்ய படைகள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் என்றும் தங்கள் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறுமாறும் அங்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா அறிவித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்வீடன் போன்ற நாடுகளும் தங்கள் குடிமக்களை இதேபோன்று அறிவுறுத்தின. இதனால், எந்த நேரமும் போர் ஏற்படலாம் என்ற நிலையில், ரஷ்யா, உக்ரைனுடன் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.

இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து சில படைகள் முகாமுக்குத் திரும்புவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறும்போது, ‘‘உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்ட சில படைகள் தங்கள் பயிற்சியை முடித்த பின்னர் கிளம்புவதற்கு தயாராக உள்ளன. தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட ராணுவப்படையினர், தங்களது பணியை முடித்து விட்டு சாலை மற்றும் ரயில் மூலம் தங்களது முகாமுக்கு திரும்பி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார். எந்த அளவுக்கு படைகள் குறைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி ரஷ்யா தெளிவாக தெரிவிக்கவில்லை. எனினும், இந்த படைகுறைப்பு நடவடிக்கையால் போர் பதற்றம் தணியும் என்று கருதப் படுகிறது.

இந்தியா அறிவுறுத்தல்

இதனிடையே, உக்ரைனில் பதற்றம் நிலவுவதால் இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட அனைவரும் வெளியேறும்படியும் இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் எனவும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

உக்ரைனில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 20,000 இந்திய மாணவர்கள் படித்து வரு வதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.