ரஞ்சி கோப்பை: மும்பை அணிக்காக சதம் விளாசிய ரகானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரகானே திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது.
இதற்கிடையே பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, ரகானே ரஞ்சி டிராபியில் விளையாடி தனது ஃபார்மை திரும்ப பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், தான் சர்வதேச போட்டியில் சறுக்கியபோது ரஞ்சி டிராபியில் விளையாடினேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. குரூப் பிரிவில் இடம் பிடித்துள்ள சவுராஷ்டிரா- மும்பை  அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகமதாபத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 1 ரன்னிலும், ஆகார்ஷிட் கோமல் 8 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த சச்சின் யாதவ் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் மும்பை அணி 12.2 ஓவரில் 44 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சவுராஷ்டிரா அணியின் பந்து வீச்சாளர்களை சோர்வடைய வைக்கும் வகையில் நிலைத்து நின்று விளையாடினர். ரகானே 211 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார்.
சர்வதேச போட்டியில் விமர்சனங்கள் எதிர்கொண்டு வரும் ரகானேவுக்கு இந்த சதம் சற்று நிம்மதியளித்துள்ளது. மும்பை அணி 73 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தள்ளது. ரகானே 100 ரன்களுடனும், சர்பராஸ் அகமது 85 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.