'செங்கோட்டையில் காவிக் கொடி பறக்கும்': ஈஸ்வரப்பா பேச்சைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் தங்கி காங். எம்எல்ஏ.,க்கள் போராட்டம்

பெங்களூரு: செங்கோட்டையில் ஒரு நாள் காவிக் கொடி பறக்கும் என்று பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவையில் நேற்றிரவு தங்கினர். அங்கேயே படுக்கைகளை விரித்துத் தூங்கினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமய்யா, பாஜகவும் அதன் சித்தாந்த தலைமையான ஆர்எஸ்எஸ் அமைப்பும் தேசியக் கொடியை அவமதித்துவிட்டன. காங்கிரஸ் இதனைக் கண்டித்து இரவு, பகலாக சட்டப்பேரவையில் போராட முடிவு செய்துள்ளது.

ஈஸ்வரப்பா பேச்சுக்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஈஸ்வரப்பாவை தகுதி நீக்கம் செய்யச் சொல்லியிருக்க வேண்டும். முதல்வரும் ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் ஈஸ்வரப்பா மூலம் தனது கொள்கைகளை மறைமுகமாக ஈஸ்வரப்பா மூலம் பேரவையில் புகுத்துகிறது என்றார்.

இதனிடையே ஈஸ்வரப்பா நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. நான் ஒரு தேசபக்தர். நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது நான் சிறை சென்று வந்தவன். அவர்கள் போராடட்டும். அதற்கெல்லாம் நான் அசைந்துகொடுக்க மாட்டேன். மூவர்ணக் கொடி நமது தேசியக் கொடி அதை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக ஈஸ்வரப்பா, ஒருநாள் செங்கோட்டையில் காவிக் கொடி தேசியக் கொடியாக ஏற்றப்படும் என்று பேசியிருந்தார். இதனை எதிர்த்தே காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் படுத்துறங்கி போராட்டம் செய்துள்ளனர்.

ஆனால், ஈஸ்வரப்பாவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் இதற்கு முன்னதாக விவசாயிகள் நலன், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக இதுபோன்ற போராட்டம் நடந்துள்ளது. ஆனால் இப்போது காங்கிரஸார் ஒரு அறிக்கையைக்கு தவறாக அர்த்தம் கற்பித்து போராடுகின்றனர். இது பொறுப்பான எதிர்க்கட்சி செய்யும் அரசியல் அல்ல. அவர்கள் இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். ஆனால் அது நடக்காது. ஈஸ்வரப்பா கூறியதில் எந்தத் தவறும் இல்லை.

முன்னதாக ஈஸ்வரப்பாவுக்கு எதிரான ஒத்திவைப்பு தீர்மானத்தை சட்டப்பேரவை நிராகரித்தது. ஈஸ்வரப்பாவை நீக்கி அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.