உலகின் சிறந்த 30 சுற்றுலா தலங்களில் கேரள கிராமம்: அருந்ததி ராயின் புக்கர் பரிசு வென்ற நாவலால் கிடைத்த அங்கீகாரம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்மனம் கிராமம் உலகின் தலைசிறந்த 30 சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் பிரபல பயண இதழான காண்டே நாஸ்ட் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கடந்த 1997-ம் ஆண்டு ‘த காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். இது அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசை பெற்றுத் தந்தது.

இந்தியாவில் இருந்து புக்கர் பரிசுபெற்ற முதல் எழுத்தாளரும் இவர்தான். அருந்ததிராய் தன் பள்ளிக்காலத்தில் கேரளாவின் அய்மனம் கிராமத்தில் வசித்து வந்தார். இதனால் அந்தப் படைப்பில் அய்மனம் கிராமமும் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. அருந்ததி ராயின் சொந்த வாழ்க்கையைத் தழுவிய இந்த ஆங்கில நாவல், இந்தியாவைக் கடந்து 20 நாடுகளில் விற்பனை யிலும் சக்கைபோடு போட்டது. இந்தப் படைப்பின் மூலம் அய்மனம் பிரபலம் ஆக, இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் படை யெடுத்து வருகின்றனர்.

இதன்மூலம் உலகின் சிறந்த 30 சுற்றுலாத் தலங்கள் பட்டியலில், அமெரிக்கா, இலங்கை,கத்தார், சிங்கப்பூர், ஜப்பான்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களோடு அய்மனம் கிராமும் இடம்பெற்றுள்ளது. இந்த கிராம மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

வலசை பறவைகள்

இந்த கிராமத்தில் வலசை வரும் பல நாட்டுப் பறவைகளை பார்வையிடுதல், நீண்டு விரியும் வயல்களின் வரப்புகளில் நடைபோடுதல், தேங்காய் அதிகம் விளையும் இங்கு தேங்காயின் உப தயாரிப்புப் பொருட்களை ருசிப்பது, படகு சவாரி, கதகளி, தற்காப்புப் பயிற்சியான களரிக்கலை ஆகியவற்றைப் பார்வையிடலாம். இந்த கிராமத்தை ஒட்டியே வேம்பநாடு ஏரியின் பொழிமுகப் பகுதியும் அமைந்துள்ளது.

அமைச்சர் விளக்கம்

இந்த அங்கீகாரம் குறித்து கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறும்போது, ‘‘வெளிநாட்டு ஊடகத்தின் மூலம் அய்மனம் கிராமத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே, அய்மனத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு மாநில அரசு பிரத்யேகமாக நிறைய திட்டங்களை செயல்படுத்தியது. இந்த அங்கீகாரம் மாநில அரசின் சுற்றுலாத் துறையையும் ஊக்குவித்துள்ளது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.