கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை உடனடியாகத் திரும்பப்பெறுக: சீமான்

கூடங்குளத்தில் புதிய அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க “இந்திய அணுமின் கழகம்” ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. அணு உலையையே முற்று முழுதாக அகற்றவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அணுக்கழிவுகளைக் சேமித்து வைக்கும் அணுக்கழிவு மையங்களை கூடங்குளத்தில் அமைக்க இந்திய ஒன்றிய அரசு, வேகவேகமாக முனைப்பு காட்டி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது. இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றினை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும்.
image
அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor -AFR) கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலகட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிட்டு, உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாகத் தமிழ் நிலம் மாறிவிடும். இதனைக் கருத்தில்கொண்டே கடந்த 2019 ஆம் ஆண்டு கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய ஒன்றிய அரசு முடிவு செய்தபோதும், கடந்த 2021 ஆம் ஆண்டு” புதிய அணுக்கழிவு மையம் அமைக்க ‘இந்திய அணுவாற்றல் ஒழுங்குமுறை ஆணையம்’ அனுமதி வழங்கியபோதும் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்ததுடன், தமிழ்நாடு முழுவதும் தொடர்ப் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது.
நிரந்தர அணுக்கழிவு மையத்தைக் கர்நாடக மாநிலம், கோலாரில் பயன்பாட்டில் இல்லாத பழைய தங்கச் சுரங்கங்களில் அமைப்போம் என்று 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணுவாற்றல் துறை அறிவித்தபோது, அதற்கு அம்மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அம்முயற்சி முற்றாகக் கைவிடப்பட்டது.
மேலும் நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை இந்தியா பெறவில்லை என்பதே எதார்த்த உண்மையாகும். உலகளாவிய அளவில் அறிவியல் வளர்ச்சி அடைந்த வல்லாதிக்க நாடுகளே அணுக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கும்போது அணுக்கழிவுகளைக் கையாள்வதற்கான அறிவியல் இன்னும் வளராத இந்தியா, தமிழத்தில் அடுத்தடுத்து தற்காலிக அணுக்கழிவு மையங்களை அமைத்து வருவது, நேரடியாகத் தமிழர்கள் மீது மத்திய அரசு தொடுக்கின்ற சூழலியல் போரேயாகும். எதிர்காலத்தில் கூடங்குளத்தையே நிரந்தர அணுக்கழிவு மையமாக மாற்றி இந்தியாவில் உள்ள அனைத்து அணுவுலைகளில் வெளியாகும் அணுக்கழிவுகளையும் கூடங்குளத்தில் கொண்டுவந்து கொட்டும் பேராபத்தும் ஏற்படக்கூடும்.

கூடங்குளத்தில் புதிய அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!https://t.co/x9NsnNDGWH pic.twitter.com/0GyB555bXd
— சீமான் (@SeemanOfficial) February 19, 2022

ஆகவே, கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணுக்கழிவு மையம் அமைக்கின்ற முயற்சியினை உடனடியாகக் கைவிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்துகிறேன். மேலும் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிக்க விரைவில் தமிழகம் வரவுள்ள இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) தலைவர் புவன் சந்திரபதாவிடம் அணுமின் நிலைய தளத்தில் அணுக்கழிவினை சேமிப்பது, மக்களின் நலத்திற்கும் மற்றும் சுற்றுபுறச் சூழலுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதையும், மக்களிடம் பெரும் எதிர்ப்பு உள்ளதையும் தெளிவாக எடுத்துக்கூறி, தமிழர்களின் ஒருமித்த கருத்தான கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான எதிர்ப்பினை அழுத்தம் திருத்தமாக தமிழ்நாடு அரசு பதிவு செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கிட கூடாதெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்திருக்கிறார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.