தேர்தலுக்குப் பின் அமைச்சர் பதவி? பொடி வைத்து பேசிய உதயநிதி

Udhayanidhi stalin may join Tamilnadu cabinet soon: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில், திமுக இளைஞரணி செயலாரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார்.

தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வென்று, மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்தார். இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் இடம்பெறுவார் என பேச்சு எழுந்தது. ஆனால் ஸ்டாலின் வெளியிட்ட அமைச்சரவை பட்டியலில் உதயநிதி பெயர் இடம் பெறவில்லை.

இருப்பினும் அரசு விழாக்கள் மற்றும் கட்சி விழாக்களில் உதயநிதி முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார். இந்தநிலையில், உதயநிதி அமைச்சராக வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், அவரின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். பின்னர் பெரும்பாலான அமைச்சர்கள் இதையே வழிமொழிந்தனர். ஆனால், உதயநிதியிடம் அமைச்சர் பதவி குறித்து செய்தியாளர்கள் கேட்கும்போதெல்லாம், தனக்கு அமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை என்று கூறி வந்தார்.

இதையும் படியுங்கள்: குற்றாலம்: பெண் இன்ஸ்பெக்டர்- திமுக மா.செ வாக்குவாதம் வீடியோ

இந்தநிலையில், இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை விட உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெறுவோம் என்றார். மேலும், 10 நாட்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளேன். பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை, நன்மதிப்பு இருக்கிறது. மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தேர்தலிலும் இது எதிரொலிக்கும். வேலுமணி திமுக அரசு மீது ஆதாரமற்ற புகார் தருகிறார். மேற்கு மண்டலத்தில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறது. என்றும் கூறினார்.

பின்னர் எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை நான் பேச முடியாது. திமுக தலைமை தான் முடிவெடுக்கும். ஒருவேளை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அப்போது பேசிக் கொள்ளலாம். முடிவு எடுக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலின் தான் என்றும் உதயநிதி கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், உதயநிதிக்கு இடம் கிடைக்கும் என பேச்சுக்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில், இதுநாள் வரை அமைச்சர் பதவி மீது ஆசையில்லை என வெளிப்படையாக கூறி வந்த உதயநிதி, இப்போது ஒருவேளை கொடுக்கப்பட்டால் பேசிக்கொள்ளலாம் என கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.