நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை:

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.

மாநகராட்சி வார்டுகள் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36,328 பேரும் என மொத்தம் 74,383 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இவர்களில் 2,062 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 14,324 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடம்பூர் பேரூராட்சி தவிர மற்ற இடங்களில் தேர்தல் களத்தில் 57,778 பேர் களத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த 57,778 பேரில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 28,660 பேரும் களத்தில் உள்ளனர்.

கடந்த 10 நாட்களாக கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். கட்சி தலைவர்களும் ஓட்டு வேட்டையாடினார்கள். நேற்று முன்தினம் பிரசாரம் நிறைவு பெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்ய தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று தேர்தல் பணியாளர்கள் இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து தயார் நிலையில் வைத்தனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 121 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. தேர்தல் பணியில் 1 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வாக்குப்பதிவு மையங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றம் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படைகள் நிறுத்தப்பட்டன. இதனால் வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்காளர்கள் ஒவ்வொருவராக வந்தபடி இருந்தனர். 8 மணிக்கு பிறகு வாக்காளர்கள் அலை அலையாக வரத் தொடங்கினார்கள். இதனால் 8 மணிக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகளை காண முடிந்தது.

வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு இருந்தது. அது கிடைக்காதவர்கள் 11 விதமான ஆவணங்களை காட்டி வாக்களித்தனர்.

கோவை வேட்டைக்காரன் புதூர், திருப்பூர், திருச்சி, நெல்லை, பணகுடி, ஏர்வாடி உள்பட பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. என்றாலும் மக்கள் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை செய்தனர்.

பெரம்பலூர் உள்பட சில இடங்களில் கட்சி பிர முகர்களிடையே தகராறு ஏற்பட்டது. என்றாலும் போலீசார் அவர்களை கலைத்து அமைதியை ஏற்படுத்தினார்கள். மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

9 மணிக்கு பிறகு வாக்குப்பதிவில் மேலும் விறுவிறுப்பு ஏற்பட்டது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் புதுமுக வாக்காளர்கள் உள்ளனர்.
முதல்முறையாக வாக்களித்த இளம்பெண்கள்

சென்னையில் சுமார் 5 லட்சம் இளைஞர்கள் முதல் தடவையாக வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். அவர்கள் அதிகளவில் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததை காண முடிந்தது. வயதானவர்களும் குடும்பத்தினரின் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றனர்.

காலை 9 மணியளவில் முதல் 2 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் கணிசமான அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் 12 சதவீதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 சதவீதம், திருவாரூர் மாவட்டத்தில் 10.25 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் பயன்படுத்தும் நோட்டா சின்னம் சேர்க்கப்படவில்லை. மின்னணு எந்திரங்களில் கட்சி வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதனால் வாக்காளர்கள் யாராவது ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

ஓட்டுப்பதிவை ஐகோர்ட்டு உத்தரவு படி சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இருந்தபடி அதிகாரிகள் ஓட்டுப்பதிவை கண்காணித்தனர்.

கோவையில் விதிமீறல்கள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்ததால் அங்கு சிறப்பு பார்வையாளர்கள் கண்காணித்து ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

எனவே 5 மணிக்கு பிறகு வாக்களிக்க வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 5 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். சென்னையில் மின்னணு எந்திரங்களை எடுத்து செல்வதற்கு ஆயுதம் தாங்கிய போலீசார் 390 வாகனங்களில் தயார் நிலையில் உள்ளனர்.

22-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் எந்த கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்து இருக்கிறது என்பது தெரிந்து விடும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மார்ச் 3-ந்தேதி பதவி ஏற்பார்கள். இதைத்தொடர்ந்து மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.

இந்த தேர்தல் மார்ச் 4-ந் தேதி மறைமுக தேர்தலாக நடைபெறும். எனவே மார்ச் முதல் வாரம் தமிழக அரசியல் களம் அனல்பறப்பதாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.