பெண்களை இறக்கி விட்டு.. பிரியங்கா பிளானுக்கு .. பாஜக வைத்த பலே செக்..!

பெண்கள்தான் சக்தி.. பெண்களால் முடியாதது எதுவும் இல்லை.. இதுதான் பிரியங்கா காந்தி, உ.பி. தேர்தலில் முன்வைத்துள்ள முழக்கம். இதை வைத்துத்தான் அவர் அங்கு களம் கண்டார். தற்போது அதே பாணியில் பாஜகவும் அங்கு களம் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸின் ஆதிக்கம் முடிந்து போய் வெகு காலமாகி விட்டது. அதை மீண்டும் உயிர்ப்பிக்க என்னென்னவோ செய்து பார்த்தது
காங்கிரஸ்
. சோனியா காந்தி முயன்றார், பிறகு ராகுல் காந்தி முயற்சித்துப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. 3வது, 4வது இடம் என்று கீழே கீழே போய்க் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

இந்த நிலையில் தான் தற்போதைய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் புத்துயிர் பெறும் முயற்சிகளை பிரியங்கா காந்தியை வைத்து மேற்கொண்டுள்ளது கட்சி மேலிடம். உத்தரப் பிரதேச மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி இந்தத் தேர்தலை பெரும் சவாலாக எடுத்துக் கொண்டு களம் கண்டுள்ளார்.

பெண்கள் வாக்குகளை முக்கியமாகக் கொண்டு அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பெண்களே சக்தி, பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதே காங்கிரஸின் முழக்கமாக இருக்கிறது. மேலும் தேர்தலிலும் பெண்களுக்கு 40சதவீத அளவுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மனதைக் கவரும் வகையிலும், பெண்களுக்குப் பிடித்த வகையிலும் அவரது செயல்பாடுகள் உள்ளன. பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பலருக்கும் காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்துள்ளது. இப்படி பெண்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு காங்கிரஸ் செயல்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜகவும் பெண் சக்தியை கையில் எடுத்துள்ளது.

உ.பியில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இந்த நிலையில் தற்போது பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் தனது பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது
பாஜக
. இதற்காக கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து பிரபலமான பெண் தலைவர்களை வரவழைத்து பிரசாரம் செய்கிறார்கள்.

முதல் இரு வாக்குப் பதிவுகளிலும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்ததால் பாஜக தனது உத்தியை வேகமாக மாற்றிக் கொண்டுள்ளது. பெண்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் அதிகம் இருப்பதால் அவர்கள் கட்சி மாறி வாக்களித்து விடக் கூடாது என்ற பதட்டம் பாஜக தலைவர்களிடையே நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் பக்கம் அதிக வாக்குகள் போய் விடாமல் தடுக்க பாஜக தீவிரமாக உள்ளது.

உ.பி. பாஜகவின் 7 பொறுப்பாளர்களில் 3 பேர் பெண்களாக உள்ளனர். மேலும் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையிலான திட்டங்களையும் ஏற்கனவே பாஜக அறிவித்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக வீடு வீடாக சென்றும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இப்படி காங்கிரஸும், பாஜகவும் பெண்களைக் குறி வைத்துக் களம் இறங்கியிருப்பதால் உ.பி. பெண்களின் வாக்குகள் இந்த முறை யாருக்கு அதிகம் கிடைக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.