மருத்துவமனைகளில் குண்டு வைத்து மோடி, அமித் ஷாவை கொல்ல திட்டமிட்ட இந்தியன் முஜாகிதீன்- தீர்ப்பு விவரம்

அகமதாபாத்:
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில், 2008ம் ஆண்டு ஜூலை 26 அன்று அகமதாபாத்தில் இரண்டு மருத்துவமனைகளில் குண்டு வெடித்ததாகவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்எல்ஏக்கள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பிறரைக் கொல்லும் நோக்கத்துடன் குண்டுகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்து மக்களை குறிவைத்து படுகொலைகளை நடத்த பயிற்சி பெற்றவர்கள். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில், அரசின் மீது வெறுப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துவதற்கு, முழு புரிதலுடனும் திட்டமிடலுடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் நோக்கம் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்துவதுடன், அன்றைய முதல்வர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்எல்ஏக்கள் மற்றும் அப்போதைய சமூக சேவகர் பிரதீப் பார்மர் ஆகியோரைக் கொல்ல வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அகமதாபாத்தில் மாலை 6 மணி முதல் 6.45 மணி வரையிலான தொடர் குண்டுவெடிப்புகளின் நேரம், நன்றாக கணித்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மருத்துவமனைகளிலும் சக்திவாய்ந்த குண்டுகள் மாலை 6.45 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் வெடித்தன. நகரின் மற்ற பகுதிகளில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மோடியும் மற்ற அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் மருத்துவமனைகளுக்கு விரைந்து செல்வார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
சமூக சேவகர்களும் பொதுமக்களும் அங்கு அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். அந்த சமயத்தில் ஒரு பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்தினால் ஏராளமானோர் இறப்பார்கள். எனவே, பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் திட்டத்துடன் இரண்டு மருத்துவமனைகளிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன” என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.