மாநில மகளிர் ஆணையத்தை தி.மு.க-வின் உபகுழு போல அமைப்பதா? மாதர் சங்கம் கண்டனம்

பிப். 2021 ல் மூன்றாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் ஆணைய நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதிதாக தலைவர் மற்றும் உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

உறுப்பினர்கள் பதவி காலம் முடிவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக அவர்களை பதவியில் இருந்து அனுப்பிவிட்டு ஆணையத்தையும் திருத்தி அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச் செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் இச்சூழலில் கடந்த 10 ஆண்டு காலமாக முறையாக செயல்படாத மாநில மகளிர் ஆணையத்தை திமுக அரசு மாற்றி அமைத்துள்ளது என்ற செய்தி ஒரு நொடி மகிழ்வைத் தந்தது.

அதன் உறுப்பினர்கள் பட்டியலை பார்த்த உடன் அந்த மகிழ்ச்சி ஒரு நொடியில் பறந்து போனது. அதனுடைய தலைவராக ஏ.எஸ்.குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த அதிகாரியாவார். மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், சிவகாமசுந்தரி, வரலட்சுமி மற்றும் ராணி ஆகிய 7 பேர் மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் ஆணையத்தின் தலைவரை தவிர மற்ற அனைவரும் திமுகவின் உறுப்பினர்கள்.

கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் மிக மோசமாக நடந்த காலத்தில் இந்த மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்கள் ஒருவர் கூட அதற்கு எதிராக சட்ட போராட்டத்தையோ சமூகப் போராட்டத்தை நடத்தியவர்கள் இல்லை.

மகளிர் ஆணையத்தின் தலைவரை தவிர மற்ற அனைவரும் திமுகவின் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர்கள், திமுகவால் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாதவர்கள் என்பது கேலிக்கூத்தானது.

ஒட்டுமொத்தமாக இந்த ஆணையம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறையை தடுக்கும் ஆணையமாக நிச்சயம் செயல்பட முடியாது. இது திமுகவின் ஒரு உபகுழுவாக மட்டுமே செயல்படமுடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.