ஓடிடி பக்கமும் தாவும் தமிழ் ஹீரோக்கள்

கொரானோ இந்தியாவுக்குள் நுழைந்ததில் பலருக்கும் அவர்களது பிசினஸ் வருவாய் மிகவும் குறைந்தது. கலைத்துறையில் சினிமா தியேட்டர்கள் அடிக்கடி மூடப்பட்டதாலும், 50 சதவீத அனுமதி என்பதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ஓடிடி தளங்களுக்கு புதிதாக வருவாயைக் கொட்டும் பிசினஸ் ஆக மாறியது.

கடந்த இரண்டு வருடங்களில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ 5, சோனி லிவ், ஆஹா என 7 ஓடிடி தளங்களுக்குள் தற்போது போட்டி நிலவி வருகிறது.

புதிய திரைப்படங்கள், பழைய திரைப்படங்கள், வெப் தொடர்கள், நேரடி வெளியீடுகள் என வாங்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இவற்றால் தியேட்டர்களின் வருவாய்க்கு பாதிப்பு என்றாலும் இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

பிரபலமான நடிகைகள் பலரும் ஏற்கெனவே ஓடிடி தொடர்களில் நடித்துவிட்டார்கள், சிலர் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள். ரம்யா கிருஷ்ணன், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் ஓடிடி தொடர்களுக்கு வந்த முக்கியமானவர்கள். நடிகைகளைப் போல தற்போது நடிகர்களும் வெப் தொடர்கள் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் ஜீ 5 ஓடிடி தளத்தில் விமல் நாயகனாக நடித்துள்ள 'விலங்கு' வெப் தொடரும், ஆஹா ஓடிடி தளத்தில் சரத்குமார் நாயகனாக நடித்துள்ள 'இரை' வெப் தொடரும் வெளியாகியுள்ளன. இவர்களைப் போல இன்னும் பலரும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். 'பேமிலிமேன்' இயக்குனர்களான ராஜ், டீகே இயக்கத்தில் ஹிந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

ஓடிடி தளங்களில் வெளியான ஆந்தாலஜி படங்களில் தான் சில முன்னணி நடிகர்கள் இதற்கு முன்பு நடித்துள்ளனர். இனி, வெப் தொடர்களிலும் மேலும் சில முன்னணி நடிகர்களைப் பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.