தேர்தல்: ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்டு வாக்களித்த மூதாட்டி இன்று மரணம்! – நாமக்கல்லில் சோகம்

உடம்பு முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஒருவரை, அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து, நேற்று வாக்களிக்க வைத்தனர். இந்த நிலையில், அந்த மூதாட்டி இன்று இயற்கை எய்தியிருப்பது, அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாமக்கல் நகராட்சில் உள்ள 18-வது வார்டுக்கு உட்பட்ட குழந்தான் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மனைவி, லட்சுமி. 75 வயதான அந்த மூதாட்டிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட, வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், லட்சுமியை வாக்களிக்க வைக்க அவர் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து அழைத்து வந்தனர்.

வாக்களித்த லட்சுமி

உறவினர் மூதாட்டியின் கையைப் பிடித்து, வாக்களிக்க வைத்தார். “இந்த நிலையிலும் லட்சுமி கடமையாற்ற வந்திருக்கிறாரே” என்றும், “இந்த நிலைமையில் இருக்கும் லட்சுமி பாட்டியை இவ்வளவு சிரமப்படுத்தி அழைத்து வந்திருக்கக் கூடாது” என பலரும் கலவையான கருத்துகளை முன்வைத்த வண்ணமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில், மூதாட்டி லட்சுமி இன்று அவர் வீட்டில் திடீரென இறந்துபோக, அவர் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். “அவரை நேற்று அவ்வளவு சிரமப்பட்டு அழைத்து வந்ததும், அவரின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம். அவரை சிரமப்படுத்தி அழைத்து வந்திருக்கக் கூடாது” என்று நாமக்கல் நகர மக்கள் ‘உச்’ கொட்டுகிறார்கள். நேற்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு வாக்களித்த 75 வயது மூதாட்டி, இன்று இயற்கை எய்தியிருப்பது, நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.