”வள்ளுவர் டூ வாலி” – சீர்வரிசையாக வழங்கப்பட்ட தமிழ் நூல்கள்! கவனத்தை ஈர்த்த திருமணம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு தமிழ் நூல்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.
தமிழ்மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து ‘தமிழினி வாட்ஸ்அப் தளம்’ ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தின் கௌரவத் தலைவராக முன்னாள் சாகித்திய அகடமி குழு உறுப்பினரும், கவிஞருமான புதுக்கோட்டையைச் சேர்ந்த தங்கம் மூர்த்தி உள்ளார். இவரது மகள் காவ்யாமூர்த்தியின் திருமண விழா புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
image
இதில் தமிழினி குழு சார்பில் மணமக்களுக்கு பாரம்பரிய முறையில் சீர்வரிசை அளிக்க அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் முடிவெடுத்தனர்.
அதன்படி, கவிஞர் தங்கம் மூர்த்தியின் வீடு அமைந்துள்ள பாரத் நகரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட 9 மாட்டு வண்டிகளில் திருவள்ளுவர், அவ்வையார், இளங்கோவடிகள், கம்பர்,பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகிய கவிஞர்கள் எழுதிய கவி நூல்களை அடுக்கி வைத்து, மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
image
அதற்கு முன்பாக, கவிதை நூல்கள், மா, பலா, வாழை என முக்கனிகள் மற்றும் மலர்களை தட்டில் ஏந்திய படியும், தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான உருமி இசை முழங்க வந்து மண்டபத்தில் இருந்த மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை பாரம்பரிய முறையில் கொடுத்தனர்.இதில் திரைப்பட நடிகர் ரவி மரியாவும் கலந்துகொண்டு சாலையில் ஆடி சென்ற காட்சி அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.