"கமலும் நானும் கட்டிப்புரண்டு சண்டை போட்டோம்!"- `மூன்றாம் பிறை' நினைவுகள் பகிரும் கே.நட்ராஜ்

டபாலுமகேந்திரா- கமல் கூட்டணியில் வெளியினா ‘மூன்றாம் பிறை’ இன்று நாற்பாதாண்டு கொண்டாடுகிறது. அதில் கே.நட்ராஜும் கொல்லன் பட்டறையில் வேலை செய்பவராக நடித்திருப்பார். ரஜினியின் நெருங்கிய நண்பர். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘வள்ளி’ படங்களின் இயக்குநர் இவர். ஒரு காலத்தில் வில்லன் நடிகர்.. இப்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் கே.நட்ராஜிடம் பேசினேன்.

”இப்பத்தான் நடிச்சது மாதிரி இருக்கு. நாற்பது வருஷம் ஆகிடுச்சுனு நினைக்குறப்ப, காலம் எவ்ளோ வேகமா ஓடுதுனு நினைக்க வச்சிடுச்சு. சத்யா மூவீஸோட ‘ராணுவ வீரன்’ல நடிச்சிட்டு இருந்தேன். அதுல தியாகராஜன் சார் தான் புரொடக்‌ஷன் டீம்ல இருந்தார். அந்த நட்பில் தான் அவர் ‘மூன்றாம் பிறை’ தயாரிக்கறப்ப பாலுமகேந்திராகிட்ட என்னை அறிமுகம் செஞ்சுவச்சார். அதுல கமலும் நானும் கட்டிப்புரண்டு உண்மையிலேயே சண்டை போட்ட மாதிரி நடிச்சிருப்போம். ஓடையில போய் விழுவோம். கமல் சாருடன் இதுக்கு முன்னாடி சில படங்கள் பண்ணியிருந்ததால, அவர் என்கிட்ட பேசுவார். ஆனா, ரஜினிகாந்த்கிட்ட பேசுறது மாதிரி அவர்கிட்ட ஜாஸ்தி பேசினதில்ல…” என்ற நட்ராஜ் தனது திரையுலக பயணம் குறித்தும் மனம் திறந்தார்.

கே. நட்ராஜ்

”1972 காலகட்டத்தில் திரைப்பட கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட புதுசுல ஆக்ட்டிங் கோர்ஸ் படிச்சேன். எங்க கூட சிவாஜி (ரஜினிகாந்த்), விட்டல், சந்திரசேகர்னு பலரும் படிச்சாங்க. நாங்க ஒவ்வொருத்தரும் ஒருத்தருக்கொருத்தர் வழித்துணையா இருந்தோம். கல்லூரி டைம்ல ஒரு முறை கே.பாலசந்தர் சார் வந்திருந்தார். நடிப்பு பயிற்சி படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமைகளை அவர்கிட்ட நடிச்சு காட்டினோம். அதுல என் நடிப்பும் அவருக்கு பிடிச்சிருந்தது. ‘மூன்று முடிச்சு’ல மனசாட்சி கேரக்டர் கொடுத்து, என்னை நடிகராக்கினார். நடிகரா ஒரு ரவுண்ட் வந்தேன். அப்புறம் டைரக்‌ஷன்லேயும் விருப்பம் வந்து, பாலசந்தர் சார்கிட்டேயே ஒர்க் பண்ணிட்டிருந்தேன்.

ரஜினியின் ‘தாய்வீடு’ படத்துல நான் உதவி இயக்குநராவும் இருந்தேன். அப்ப ரைட்டர் தூயவன் ஒரு கதை வச்சிருந்தார். அதை இயக்க ஆள் தேடிட்டு இருந்தார்னு கேள்விப்பட்டு அவரைப் போய் பார்த்தேன். தூயவன் என்கிட்ட ‘இந்தக் கதை ரஜினிக்கானது. அவர்கிட்ட இந்தக் கதையை ஓகே பண்ணினா, நீயே இயக்கலாம்’னார். நானும் ரஜினிகிட்ட கதையை சொன்னேன். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’தை ஆரம்பிச்சிட்டோம். நானும் இயக்குநராகிட்டேன்.

அந்தப் படத்துல லதா ரஜினிகாந்தை ஒரு பாடல் பாட வைக்க விரும்பினேன். ஏன்னா, ‘டிக் டிக் டிக்’ல அவங்க ‘நேற்று இந்த நேரம்’ பாடியிருந்தாங்க. அதனால இதுல ‘கடவுள் உள்ளமே..’ பாடவச்சேன். அந்தப் பாடல் எல்லா பள்ளிகளிலும் தேசிய கீதம் மாதிர் ஒலிச்சிருக்கு.. அடுத்து ‘செல்வி’, ‘இரண்டு மனம்’னு அடுத்தடுத்து படங்கள் இயக்கினேன். ‘வள்ளி’யை இயக்கினதும் இனிமையான தருணம். ரஜினியா ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பு அது. அதுல ‘என்னுள்ளே’ பாடல் கம்போஸிங்ல அவ்ளோ பிரமாதமா வந்துச்சு. ஆனா, அதை நல்லா விஷுவலாக்கணும்னு எனக்குள்ல ஒரு பயம் வந்திடுச்சு. அதன்பிறகு டைரக்‌ஷன் வாய்ப்புகள் வரல. ஸோ, டி.வி.சீரியல்கள் பக்கம் வந்துட்டேன்.. இப்படி என் பயணத்துல சந்தோஷ தருணங்கள் நிறையவே இருக்கு..” – மகிழ்கிறார் நட்ராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.