கிடா ரத்தத்தை வைத்து காதலிக்கு ரூட்டு போட்ட கிடாரி காதலன் கைது..! போலீசாரை மிரள வைத்த சம்பவம் <!– கிடா ரத்தத்தை வைத்து காதலிக்கு ரூட்டு போட்ட கிடாரி காதலன்… –>

திருச்சி அருகே ஊரைக்காலி செய்து சென்ற  காதலியை மீண்டும் வீட்டிற்கு வரவைப்பதற்காக,  வீடு முழுவதும் ரத்தத்தை சிதறவிட்டு நாடகமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரை மிரளவைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 4 வது தெருவில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்த தேவராஜ் வெளியூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டு முதல் தளத்தில் வாடகைக்கு தங்கி இருந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பதாக வீட்டு உரிமையாளர் தேவராஜுக்கு மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன தேவராஜ் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு சம்பவம் குறித்து தெரிவித்து விட்டு நேரில் சென்றார்.

ஒரே வீட்டில் 4 பேர் கொலை என்பதால் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். மாடிப்படிகளில் ரத்த துளிகள் சிதறிக்கிடந்தது. அங்கு சென்று பார்த்த போது வீடு முழுவதும் ரத்தம் சிதறிக்கிடந்த நிலையில், அங்கு எந்த ஒரு சடலமும் இல்லை. இதையடுத்து கொலையாளிகள் சடலத்தை கையோடு தூக்கிச்சென்றிருக்கலாமோ என்று போலீசார் சீரியசாக விசாரித்துக் கொண்டிருந்தபோது. அந்த வீட்டில் தங்கி இருந்த இளைஞரின் நண்பர் என்று அங்கு வந்த துரைபாலன் என்பவர் தனது செல்போனுக்கும் இந்த கொலை குறித்து தகவல் வந்ததாக கூறி வாண்டடாக வந்து போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் நுழைந்தார்.

முதற்கட்ட விசாரணையில் வீட்டில் சிதறிக்கிடந்தது ஆட்டுக்கிடா ரத்தம் என்பது தெரியவந்தது. இதையடுத்து என்ன காரணத்திற்காக இங்கு ரத்தம் வீசப்பட்டது ? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்ற கோணத்தில் விசாரணையை திருப்பிய போலீசார், வீட்டு உரிமையாளர் தேவராஜ் மற்றும் துரைபாலன் ஆகியோருக்கு தகவல் சொன்னவர்களின் செல்போன் எண்ணை பெற்று விசாரித்த போது, வீட்டு உரிமையாளர் தேவராஜுக்கு கொலை என தகவல் தெரிவித்ததே துரை பாலன் தான் என்பது தெரியவந்தது.

துரைபாலனை அழைத்துச்சென்று சிறப்பான கவனிப்புடன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மிஸ் பயர் ஆனா காதல் விவகாரம் அம்பலமானது. அந்தபகுதியில் பேக்கரி நடத்திவந்த 25 இளைஞர் ஒருவர், தனது முறைப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து தேவராஜுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். அந்த பேக்கரியில் வேலைபார்த்து வந்த துரைபாலன்அடிக்கடி வீட்டுக்கு சென்று வந்த போது, பேக்கரி ஓனர் மனைவியுடன் முறையற்ற காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவர் தனது மனைவியை கண்டித்ததோடு, தனது மாமனார் மாமியாரை அழைத்து வந்து வீட்டில் காவலுக்கு வைத்துள்ளார். அதனையும் மீறி ரகசிய காதலர்கள் இருவரும் செல்போனில் பேச்சு வார்த்தையாக இருந்துள்ளனர்.

இதனை அறிந்த போக்கரி உரிமையாளர், இப்படியே போனால் மனைவியை துரைபாலனிடம் பறிகொடுக்க வேண்டியதிருக்கும் என்பதால் உஷாராகி, பேக்கரி தொழிலையே கைவிட்டுள்ளார். மனைவியின் செல்போனை வாங்கி உடைத்து போட்டதோடு, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென அந்த வாடகை வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் தனது ரகசிய காதலியை தொடர்பு கொள்ள இயலாமல் மதுகுடித்த மந்தி போல சுற்றி வந்த துரைபாலன், அந்த இளைஞர் குடும்பம் கொல்லப்பட்டு விட்டதாக வதந்தி பரப்பினால் போலீஸ் விசாரணைக்கு அந்தப்பெண் குடும்பத்தோடு வருவார் அப்போது அவரை பார்க்கலாம், தொடர்பு எண் பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளான். அதன்படி அந்தபகுதியில் உள்ள இறைச்சி கடைக்கு சென்று அதிகாலையில் ஆட்டுகிடா ரத்தத்தை பிளாஸ்டிக் பையில் வாங்கி வந்து வீட்டுக்குள் வீசிவிட்டு மாடிப்படிகளில் தெளித்து வைத்து 4 பேர் கொலையுண்டதாக நாடகமாடியது அம்பலமானது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சிக்கியது.

முறையற்ற காதலியின் முகவரியை போலீஸ் மூலமே அறிந்து கொள்ள ஸ்கெட்ச் போட்டதால், துரை பாலன் தற்போது சிறைப்பறவையாக ஜெயிலில் கம்பி எண்ணி வருகின்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.