தாமதமான அறிவிப்பே நாங்கள் சிக்கிக் கொள்ள காரணம்; உக்ரைன் மாணவர்கள்| Dinamalar

கீவ்: ‘தாமதமான அறிவிப்பே, நாங்கள் சிக்கிக் கொள்ள காரணமாகி விட்டது’ என, உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கோபால் மகன் ஸ்ரீதரன், 21. உக்ரைனில் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்தான், மாணவர்களுக்கு இந்திய துாதரகம் வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களால், உடனடியாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் ஸ்ரீதரன் அளித்த பேட்டி:பல்கலையில், ‘ஆன்லைன்’ கல்விக்கு அனுமதி தராததால், உக்ரைனில் இருந்து வெளியேற முடியவில்லை. போர் மூள்வதற்கு இரண்டு வாரத்திற்கு முன்தான், இந்திய துாதரகம் அறிவிப்பு தந்தது.

இங்கு மொத்தம், 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இரண்டு வாரத்தில் வெளியேற முடியாது.மார்ச் 5ம் தேதி வரை விமான டிக்கெட் அனைத்தும் விற்று விட்டன. போர் ஆரம்பிக்கும் முந்தைய நாள் வரை கல்லுாரி வகுப்புகள் நடந்தன. அதன் பின்தான், ஆன்லைன் முறையை கொண்டு வந்தனர். விடுதி அறை, பதுங்கு குழிகள், மெட்ரோ ரயில் நிலையம் போன்றவற்றில் பலர் தங்கியுள்ளோம். போர் மூண்ட கீவ், கார்க்கியூவ் பகுதிகள் தான் ஆபத்தில் உள்ளன. இங்கு தமிழகத்தை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் பகடைக்காயா?

ஸ்ரீதரனின் தந்தை கோபால் பேட்டி:அங்குள்ள பல்கலையில் இன்று பாடம் நடத்தினால், மறுநாளே தேர்வு நடத்துவர். இதனால், பாடத்தை தவற விடும் மாணவர்கள், பின் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி வரும். போர் மூண்ட முந்தைய நாள் வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயில, பல்கலை நிர்வாகம் சம்மதிக்கவில்லை. மாணவர்களை பகடைக்காயாக்க நினைக்கின்றனரா என்பது தெரியவில்லை. போரினால் கிழக்கு உக்ரைன் தான் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

அப்பகுதியில் உள்ள இந்தியர்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.10 நிமிடத்திற்கு ஒரு குண்டு! உக்ரைனில் தவித்து வரும், சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் கவுதம் அளித்த பேட்டி: மேற்கு உக்ரைனில் இருந்து மட்டுமே, இந்தியர்கள் மீட்கப்படுகின்றனர். கிழக்கு உக்ரைன், ரஷ்யா எல்லைக்கருகே இருப்பதால், இங்கு யாரும் வருவதில்லை. இங்கு 6,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர்.

latest tamil news

எப்படியாவது போலாந்துக்கு வரச் சொல்கின்றனர். அதற்கே ஒரு நாளாகி விடும். இங்கு ரயில், பஸ் வசதி எதுவும் இல்லை. சுரங்கத்திற்குள் தங்கியுள்ளோம். ஐந்து நாட்களுக்கு மட்டுமே உணவு கையிருப்பு உள்ளது. ரஷ்யப் படைகள் உள்ளே வந்து விட்டன.

வெளியே வந்தால் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகும் நிலை உள்ளது. 10 நிமிடத்திற்கு ஒரு முறை குண்டு சத்தம் கேட்கிறது.தயவு செய்து கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரை மீட்க, இந்தியாவும், தமிழகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

– நமது நிருபர்- –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.