இன்னும் சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை: பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு!

உக்ரைன்
மீது போர் தொடுத்துள்ள
ரஷ்யா
ஐந்து நாட்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சரமாரியாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதையடுத்து, ரஷ்யா அடங்கிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது ரஷ்யா பதிலுக்கு பொருளாதார தடைகளை விதித்து அதிர்ச்சியளித்தது.

அதேசமயம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும், போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. அதற்கு ஏற்றவகையில் பேச்சுவார்த்தை நடத்த இணங்கி வந்த ரஷ்யா அதற்காக
பெலாரஸ்
நாட்டை தேர்வு செய்தது.

புடின் புது “ஸ்கெட்ச்”.. ராணுவத் தாக்குதல் வேகம் திடீர் குறைப்பு.. உக்ரைன் குழப்பம்!

ஆனால், பெலாராஸ் நாட்டுடன் ரஷ்யா மிகுந்த நட்புடன் இருக்கிறது. அந்நாட்டு எல்லையின் வழியாகவும் ஊடுருவி உக்ரைன் மீது தாக்குதலை ரஷ்ய ராணுவத்தினர் நடத்தினர். போருக்கு முன்பாக பெலாரஸ் நாட்டுடன் அணு ஆயுத ஏவுகணை சோதனையையும் ரஷ்யா நடத்தியது. இதனால், பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் வேறு ஒரு நாட்டை தேர்வு செய்யுமாறு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.

வல்லமைமிக்க ரஷ்யா பல்முனைத் தாக்குதல் நடத்தினாலும், நாங்கள் ஒடுங்கிவிட மாட்டோம்; கடைசி நிமிடம் வரை எங்கள் நாட்டை காக்க போராடுவோம் என்று உக்ரைன் அதிபரும், அந்நாட்டு வீரர்களும், பொதுமக்களும் உறுதியாக இருக்கின்றனர். இதனை அங்கிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

இதனாலேயே பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டது. இதற்காக ஒரு குழுவையும் உக்ரைன் அமைத்துள்ளது. அதன்படி, இந்திய நேரப்படி, பிற்பகல் 2.30 மணியளவில் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமெல் நகருக்கு ரஷ்ய தூதுக்குழு வந்து சேர்ந்து விட்டதாகவும், உக்ரைன் தூதுக்குழுவின் வருகைக்காக காத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ் உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் குழுவும் பெலாரஸ் சென்றடைந்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதற்கிடையே, உக்ரைனுடன் கூடிய விரைவில் சமாதான ஒப்பந்தத்தை எட்ட ரஷ்யா ஆர்வமாக உள்ளதாக ரஷ்ய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதால் தாக்குதலை ரஷ்யா குறைத்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும், அணு ஆயுதங்களை சிறப்பு தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய ராணுவத்துக்கு புடின் உத்தரவிட்டுள்ளதால், அச்சம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.