காற்று மாசை குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்: ஐ.நா.,

நியூயார்க் : ‘உலகில் பருவ நிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருவதால் அடுத்த, 18 ஆண்டுகளில் மக்கள் நோய், பசி, பட்டினி, வறுமையால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என, ஐ.நா., எச்சரித்துள்ளது.

ஐ.நா., விஞ்ஞானிகள் குழு, பருவ நிலை மாற்ற அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் ஆண்டுகளில் பருவ நிலை மேலும் மோசமாகும். உலகில் கரியமில வாயு வெளியேற்றத்தால் வெப்பம் அதிகமாகும். இந்நிலையில், வெப்ப அளவு இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது, தற்போது 1.5 டிகிரியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த இலக்கை எட்டாவிட்டால், அடுத்த 18 ஆண்டுகளில் மிக அதிக அளவில் நோய், பசி, பட்டினி, வறுமையால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தட்ப வெப்ப நிலை, இயல்பை விட 2 டிகிரி அதிகரிக்கும் பட்சத்தில் வெப்பம், தீ, வெள்ளம், வறட்சி போன்றவற்றால், 127 வகை பாதிப்புகள் ஏற்படும். அவற்றில் சிலவற்றை சீர் செய்ய முடியாத நிலை உண்டாகும். தற்போது பிறக்கும் குழந்தைகள், 2100ம் ஆண்டு வரை வாழும் பட்சத்தில், நான்கு மடங்கு வெள்ளம், புயல், வறட்சி, வெப்ப அலை போன்றவற்றால் பாதிக்கப்படுவர்.

ஏற்கனவே குறைந்தபட்சம் 330 கோடி மக்களின் அன்றாட வாழ்வு, பருவ நிலை மாற்றத்தால் பாதிக்கும் அபாயத்தில் உள்ளது. கடும் வெப்பத்தால், 15 மடங்கிற்கும் அதிகமானோர் இறக்கும் ஆபத்தும் உள்ளது. எனவே இனியும் உலக நாடுகள் ஒன்றிணைந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க உறுதியான முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தினால், எதிர்காலத்தில் பாதுகாப்பான வாழ்வுக்கான வாய்ப்பை இழந்து விடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.