நம்பிக்கை ஒளி | கீவ் நகரில் ஊரடங்கு விலக்கல்; சிறப்பு ரயில்கள் தயார்: இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அழைப்பு

கீவ்: வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்களை மீட்பதற்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கீவ் நகரில் வார இறுதியை முன்னிட்டு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் மேற்குப் பகுதிகளுக்குச் செல்ல இந்திய மாணவர்கள் ரயில் நிலையங்களுக்கு வரவும். உக்ரைன் ரயில்வே இந்திய மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

— India in Ukraine (@IndiainUkraine) February 28, 2022

வேகமெடுக்கும் ஆபரேஷன் கங்கா: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 5 விமானங்கள் மூலம் 1500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 6-வது விமானமும் உக்ரைனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதற்கிடையில் இன்று காலை பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில் மீட்புப் பணிகளில் ஈடுபட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹர்தீப் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிவு எட்டப்பட்டது.

இந்தச் சூழலில் உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகி வருகின்றன. இதனால் உக்ரைன் முழுவதும் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இந்திய அரசு மீட்புப் பணிகளைத் துரித்தப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கீவ், கார்கிவ், டானெட்ஸ், ஒடேசா, ஆகிய கிழக்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள இந்திய மாணவர்களை மேற்கே ருமேனியா, போலந்து எல்லைகளுக்குக் கொண்டு வருவது எளிது. இன்னும் 14000 பேர் உக்ரைனில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிரத்யேக ட்விட்டர் கணக்கு: ஆபரேஷன் கங்காவின் கீழ் இந்திய அரசு, உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க பிரத்யேக ட்விட்டர் கணக்கை இயக்கி வருகிறது. அந்த ட்விட்டர் கணக்கில் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவாக் ரிபப்ளிக் நாடுகளின் ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் ‘இரக்கம்’: இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரஷ்ய ராணுவம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கீவ் நகரில் உள்ள மக்கள் இயல்பாக இருக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.