Russia-Ukraine crisis Live: உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

உக்ரைனின் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் “முன்நிபந்தனைகள் எதுவும் இல்லாமல்” பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு விலாடிமிர் ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிகாரிகள் பங்கேற்க தயார் என்றும் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் பிரிப்யத் நதி அருகே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

ஐ.நா. அவசரக் கூட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று (பிப்.28) அவசரக் கூட்டம் நடத்தவுள்ளது. முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் 352 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 116 குழந்தைகள் உள்பட 1,500-க்கும் அதிகமானாேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவ வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவலை உக்ரைன் மற்றும் ரஷ்யா வெளியிடவில்லை.

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: அமெரிக்கா நடவடிக்கை

ரஷ்யாவின் அணு ஆயுதப் படைப் பிரிவினரை அந்நாட்டு அதிபர் புதின் உஷார் படுத்தியுள்ளதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன. இதையடுத்து, ரஷ்ய எரிசக்தி துறைக்கு புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அணு ஆயுதப் படைகளை ரஷ்யா உஷார் படுத்தியிருப்பது மூன்றாம் உலகப் போருக்கு கொண்டு சென்றுவிடக் கூடும் என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா பதிலடி

ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வரும் நிலையில், தங்கள் நாட்டின் பங்களிப்புடன் விண்வெளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கீழே விழச் செய்துவிடுவோம் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோஜின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

420 டன் எடை கொண்ட விண்வெளி ஆய்வு நிலையத்தை ஒருவேளை கீழே விழச் செய்தால் அது அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிலோ, இந்தியா அல்லது சீனாவிலோ விழக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

Live Updates

16:54 (IST) 28 Feb 2022
இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உக்ரைன் முயற்சி – இந்திய தூதர் இகோர் பொலிகா

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உக்ரைன் அதிகாரிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என இந்திய தூதர் இகோர் பொலிகா தெரிவித்துள்ளார்


16:37 (IST) 28 Feb 2022
உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பெலாரஸ் எல்லையில் தொடங்கியுள்ளன என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் குறுஞ்செய்தி மூலம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். முன்னதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் பேச்சுவார்த்தைக்கான உக்ரைனின் கோரிக்கைகள் உடனடி போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெறுவது என்று கூறியது. (ராய்ட்டர்ஸ்)


16:24 (IST) 28 Feb 2022
உக்ரைனில் 2 நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்

ரஷ்யப் படைகள் தென்கிழக்கு உக்ரைனில் உள்ள இரண்டு சிறிய நகரங்களையும், அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியையும் கைப்பற்றியதாக Interfax செய்தி நிறுவனம் கூறியுள்ளது, ஆனால் ரஷ்யாவின் இராஜதந்திர மற்றும் பொருளாதார சிக்கல்கள் அதிகமானதால் மற்ற இடங்களில் மெதுவாக முன்னேறி வருகிறது.

நான்கு நாட்கள் சண்டை மற்றும் சிலர் எதிர்பார்த்ததை விட மெதுவாக சென்ற ரஷ்ய முன்னேற்றத்திற்குப் பிறகு, உக்ரேனிய பிரதிநிதிகள் ரஷ்ய பிரதிநிதிகளுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ரஷ்ய கூட்டாளியான பெலாரஸின் எல்லைக்கு வந்துள்ளனர் என்று உக்ரேனிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எந்த முன்னேற்றமும் அடைய முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

திங்கட்கிழமை கிழமைக்கு முன்னதாகவே தலைநகர் கீவ் மற்றும் முக்கிய கிழக்கு நகரமான கார்கிவ் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் முக்கிய நகர்ப்புற மையங்களைக் கைப்பற்றுவதற்கான ரஷ்ய தரைப்படைகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் தென்கிழக்கு ஜபோரிஜ்ஜியா பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க் மற்றும் எனர்ஹோடார் நகரங்களையும், ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியையும் அதன் படைகள் கைப்பற்றியதாக இன்டர்ஃபாக்ஸ் தெரிவித்துள்ளது. ஆலையின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்ந்தன. (ராய்ட்டர்ஸ்)


16:09 (IST) 28 Feb 2022
இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் – போலந்து

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் உட்பட 2 லட்சம் பேர் போலந்து எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர். போலந்து நாட்டிற்கு இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என போலந்து நாட்டிற்கான இந்திய தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்


15:50 (IST) 28 Feb 2022
உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள் – நேட்டோ தகவல்

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நிதியுதவி தரப்படும் என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.


15:16 (IST) 28 Feb 2022
உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும் – அதிபர் வலியுறுத்தல்

உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.


15:09 (IST) 28 Feb 2022
உக்ரைனில் 102 பொதுமக்கள் பலி, 304 பேர் காயம் – ஐநா உரிமைகள் தலைவர்

உக்ரைனில் 102 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 304 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா மனித உரிமைகள் தலைவர் பேச்லெட் கூறியுள்ளார்.இருப்பினும், உண்மையான எண்ணிக்கை அதிகமான இருக்கலாம் என்றார்.


14:52 (IST) 28 Feb 2022
கீவ்வில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்ய இராணுவம் அனுமதி

உக்ரைன் தலைநகர் கீவ்வில் வசிப்பவர்கள் விரும்பினால், நகரத்தை விட்டு வெளியேற பாதுகாப்பான நடைபாதையைப் பயன்படுத்தலாம் என்று ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் திங்களன்று, கிய்வ் குடியிருப்பாளர்கள் உக்ரேனிய தலைநகரின் தென்மேற்கே வாசில்கிவ் செல்லும் நெடுஞ்சாலையை பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்று கூறினார். உக்ரேனிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சண்டை மூண்ட நிலையில், தலைநகரின் பல்வேறு பிரிவுகளில் ரஷ்யப் படைகளின் சிறு குழுக்களுடன் தாங்கள் சண்டையிடுவதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.


14:41 (IST) 28 Feb 2022
தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் – ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களுக்கு உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களை மீட்க வேண்டும். தேவையான நடவடிக்கை எடுக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான தொலைப்பேசி உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.


14:28 (IST) 28 Feb 2022
இந்திய மாணவர்களை எல்லையை கடக்க விடாமல் தடுக்கும் உக்ரைன் ராணுவம்

இந்திய மாணவர்களை வெளியேற விடாமல் உக்ரைன் ராணுவம் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உக்ரைன் ராணுவம் வானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், போலந்து எல்லைக்குள் செல்வதை தடுத்திட அவர்களுக்கு நடுவே கார்களை நிறுத்தும் செயலில் ஈடுபடுவதாக கேரள மாணவர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மாணவி பேசிய காணொலியை மலையாள செய்தி நிறுவனம் Mathrubhumi வெளியிட்டுள்ளது.


13:53 (IST) 28 Feb 2022
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் 4 மத்திய அமைச்சர்கள்

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த 4 மத்திய அமைச்சர்கள் அண்டை நாடுகளுக்கு செல்கிறார்கள். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளுக்கு செல்கிறார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஸ்லோவாக்கியா செல்கிறார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கு விரைகிறார். மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் போலந்து செல்கிறார்.


13:47 (IST) 28 Feb 2022
ரஷ்யாவிற்கு தடை விதிக்க சீனா எதிர்ப்பு

மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்து வரும் நிலையில், அவை அனைத்தும் ஒரு தலைப்பட்சமானது என சீன வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.


13:22 (IST) 28 Feb 2022
உக்ரைன்-ரஷ்யா போர் – பிற்பகல் 2:30 மணிக்கு பேச்சுவார்த்தை

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது


13:14 (IST) 28 Feb 2022
ரஷ்ய ராணுவம் தாக்குதல் வேகம் குறைந்தது – உக்ரைன்

ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.


13:04 (IST) 28 Feb 2022
3,4 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை

வரும் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


13:03 (IST) 28 Feb 2022
10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு


12:39 (IST) 28 Feb 2022
பெலாரஸில் பேச்சுவார்த்தை

ரஷ்யா – உக்ரைன் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்களுக்காக கடைகள் திறக்கப்பட்டுள்ளன.


12:27 (IST) 28 Feb 2022
உலகின் மிகப்பெரிய விமானத்தை தாக்கி அழித்த ரஷ்யா

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான ஆன்டனவ்-ஏ.என்.-225 மீது குண்டு வீசி அழித்ததாக உக்ரைன் அரசு தகவல்


11:49 (IST) 28 Feb 2022
கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது – உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. உக்ரைன் தலைநகர் கட்டுப்பாட்டில் உள்ளது என்று உக்ரைன் ராணுவம் அறிக்கை


11:17 (IST) 28 Feb 2022
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியர்களை மீட்டெடுக்க அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.


11:15 (IST) 28 Feb 2022
அமைதிப் பேச்சுவார்த்தை : பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு

ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.


10:47 (IST) 28 Feb 2022
தலைநகரில் வான்வெளி தாக்குதல்: உக்ரைன் ராணுவம் உஷார்

தலைநகர் கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ராணுவத்திற்கு உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்தின் உஷார் நிலையில் உள்ளனர்.


10:21 (IST) 28 Feb 2022
மேற்கத்திய நாடுகளுக்கு பெலாரஸ் எச்சரிக்கை

அணுசக்தி அல்லாத அந்தஸ்தை கைவிட பெலாரஸில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்புதல் கிடைத்தது. 65.16 சதவீதம் பேர் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகவும், 10.07 சதவீதம் அதற்கு எதிராகவும் வாக்கு செலுத்தியிருந்தனர்.

போலந்து, லிதுவேனியாவில் அணு ஆயுதங்களை நீங்கள் (மேற்கத்திய நாடுகள்) பரிமாற்றினால், நாங்கள் ரஷ்யாவிடம் அளித்த அணு ஆயுதங்களை திரும்பப் பெறுவோம் என்று எச்சரித்தார் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ.


09:55 (IST) 28 Feb 2022
ரஷ்ய ரூபிள் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் வரலாறு காணாத அளவுக்கு இன்று வீழ்ச்சியடைந்தது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததற்காக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அறிவித்த பின்னர், ரஷ்ய ரூபிள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


09:47 (IST) 28 Feb 2022
அடுத்த 24 மணி நேரம் பயங்கரமானதாக இருக்கும்-உக்ரைன் அதிபர்

உக்ரைனில் அடுத்த 24 மணிநேரம் பயங்கரமானதாக இருக்கும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார்.


09:38 (IST) 28 Feb 2022
தனித்தனியாக 2 கூட்டங்களை கூட்டுகிறது ஐ.நா.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. தனித்தனியாக 2 கூட்டங்களை இன்று நடத்தவுள்ளது. ஐ.நா.வில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் பொது கூட்டம் தனியாகவும், சக்திவாய்ந்த 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனியாகவும் கூடவுள்ளது.


09:22 (IST) 28 Feb 2022
கதிரியக்க கழிவுகளை அகற்றும் தளம் மீது தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள கதிரியக்க கழிவுகளை அகற்றும் தளத்தை ஏவுகணைகள் தாக்கியதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. ஆனால் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது கதிரியக்க பொருட்கள் வெளியானதற்கான அறிகுறிகளோ இல்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.


09:13 (IST) 28 Feb 2022
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு: பிரேசில் அதிபர் கருத்து

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு செய்துள்ள விவகாரத்தில் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கருத்து தெரிவித்துள்ளார்.


09:00 (IST) 28 Feb 2022
100 மாணவர்களை வரவேற்ற குஜராத் முதல்வர்!

உக்ரைனில் சிக்கிய மாணவர்களில் 100 பேர் குஜராத்துக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். அவர்களை அந்த மாநில முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.