ரஷ்யா – உக்ரைன் போர் மட்டுமல்ல… – நடுநிலைமைக்கு மறுபெயர் இந்தியா!

கடந்த 20-ம் நூற்றாண்டில் வியட்நாம், லாவோஸ், கியூபா, லெபனான், லிபியா, பனாமா உள்ளிட்டபல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. 21-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், இராக்கை அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா இதுவரை 102 போர்களை நடத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் எந்தவொரு நாட்டிலும் அமைதி நிலைநாட்டப்பட்டதாக தகவல் இல்லை. இதற்கு நேர்மாறாக இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களும் தலைதூக்கி உள்ளனர்.

கடந்த 1962-ல் கியூபாவில் ரஷ்ய ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டன. அப்போது அமெரிக்கா அலறியது. பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பிறகு உலகின் அமைதிக்காக கியூபாவில் இருந்து ரஷ்ய ஏவுகணைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பிறகே அமெரிக்கா அமைதியானது.

சோவியத் யூனியன் உடைந்தபோது கடந்த 1991-ல் உக்ரைன் தனிநாடாக உதயமானது. ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 2008-ல் உக்ரைனை நேட்டோவில் இணைக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் பக்கம் சாயாமல் உக்ரைனின் அப்போதைய ஆட்சியாளர்கள் ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வந்தனர். இதை முறியடிக்க அமெரிக்கா திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆரஞ்சு புரட்சி என்ற பெயரில் உக்ரைனில்உள்நாட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கலவரம் வெடித்து போலீஸார் உட்பட 130 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதே ஆண்டில் ஆட்சி கலைந்தது.

சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா வலுவிழந்திருந்தாலும் ராணுவ பலத்தில் அமெரிக்காவுக்கு சரிசமமாக உள்ளது. தற்போது உக்ரைனை மீண்டும் நேட்டோவில் சேர்த்து அந்த நாட்டில் நேட்டோ படைகளை குவிக்க அமெரிக்கா திட்டமிட்டதால் போர் மூண்டிருக்கிறது.

இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் பின்னணி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் நடுநிலைமை வகித்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியும் இந்தியா தனது நடுநிலை வகித்தது.

அரசியல் கொள்கை ரீதியாக ரஷ்யாவைவிட அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக உள்ளது. எனினும் இந்தியா சுதந்திரம் அடைந் பிறகு ரஷ்யா வழங்கிய உதவிகளையாரும் மறக்க முடியாது. 1971 போரின்போது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. வங்கதேசத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு அமெரிக்காவும் முக்கிய காரணமாகஇருந்தது. அணுசக்தி சோதனை, காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டி ருக்கிறது. கரோனா தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குகூட தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடை விதித்தார்.

உக்ரைன் தனி நாடாக மாறிய பிறகு தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டுகூட டி-80 ரக டாங்கிகளை பாகிஸ்தானுக்கு வழங்க உக்ரைன் ஒப்பந்தம் செய்தது. சர்வதேச அமைப்பான எப்ஏடிஎப்-யின் கிரே பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்போது அந்த நாட்டுக்கு உக்ரைன்ஆயுதங்களை வழங்குவதை எந்தவொரு மேற்கத்திய நாடும் இதுவரை கண்டிக்கவில்லை.

பல்வேறு பின்னணிகள் இருந்தாலும் அப்போதும் இப்போதும் இந்தியா நடுநிலை தவறாமல் தனது கொள்கையில் உறுதியுடன் நிற்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. தனது நலன்களை மட்டுமே அந்த நாடு முன்னிறுத்துகிறது. இதற்கு நேர்மாறாக சர்வதேச அரங்கில் நடுநிலைமைக்கு மறுபெயராக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இந்தியா தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்தான் தங்களது கொள்கைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.