நட்பு, நாகரீகம்… எதிர் முகாமையும் சுண்டி இழுக்கும் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு பிறகு, மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்திருக்கிறது. முதலமைச்சர் பதவி என்பது மு.க. ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே அரசியல் நோக்கர்கள் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வந்தார்.

இந்த சூழலில்தான், மு.க. ஸ்டாலின் தனது தந்தை கலைஞர் கருணாநிதியின் வழியில் எதிர்முகாமையும் சுண்டி இழுக்கும் விதமாக எதிர்முகாமைச் சேர்ந்தவர்களை சந்திப்பதற்கு அப்பாயின்மெண்ட் வழங்கியும் சந்தித்தும் உள்ளார்.

தமிழக அரசியலில் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாமல் தனது கிண்டலான அரசியல் விமர்சனங்களாலும் தாக்கத்தை செலுத்தியவர் அரசியல் விமர்சகர் சோ. அவர் கலைஞர் கருணாநிதியை விமர்சித்தாலும் நட்பு, நாகரீகம் என்று சந்திப்புகளும் நடந்தது உண்டு. அந்த வழியை மு.க. ஸ்டாலினும் பின்தொடர்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழ் ஊடகங்களில் தனது சாணக்யா யூடியூப் சேனல் மூலம் அரசியல் கருத்துகளை தெரிவித்து கவனத்தை ஈர்ப்பவர் ஊகவியலாளர் ரங்கராஜ் பாண்டே. இவர் பாஜகவின் எல்லா செயல்களையும் தீவிரமாக ஆதரிப்பதில்லை என்றாலும் பிரதமர் நரேந்திர மோடியையும், நரேந்திர மோடி அரசையும் அதன் செயல்பாடுகளையும் தீவிரமாக ஆதரிப்பவர். அதே நேரத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும் வந்துள்ளார். பாண்டேவின் விமர்சனங்களுக்கு திமுக ஆதரவு யூடியூபர்களும் திராவிட இயக்க ஆதரவு யூடியூபர்களும் தங்கள் யூடியூப் சேனல்களில் கடும் பதிலடி கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு உடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நேரம் கேட்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிஸியான செடியூலில் இருந்தாலும் எதிர்முகாமைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே சந்திப்பதற்கு நேரம் அளித்து சந்தித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – பாண்டே சந்திப்பு தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதே போல, ஊடகங்களில் திமுக-வை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் துக்ளக் ரமேஷ். இவருடைய மணிவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவருடன், அமைச்சர் துரைமுருகனும் உடனிருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த இரண்டு சந்திப்புகள் தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது. மு.க. ஸ்டாலின் தனது தந்தை கலைஞர் கருணாநிதி வழியில் நட்பு, நாகரீகம் என எதிர்முகாமைச் சேர்ந்தவர்களையும் கவர்ந்து சுண்டி இழுத்து வருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுகவை விமர்சித்து வரும் எதிர்முகாமைச் சேர்ந்த ரங்கராஜ் பாண்டேவை சந்தித்திருப்பது திமுக ஆதரவு யூடியூபர்கள் மத்தியில் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.