பெட்ரோல், டீசல் விலை உயருகிறது?| Dinamalar

புதுடில்லி :ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவடைவதையடுத்து அடுத்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் அறிவிக்கின்றன.

இந்த நடைமுறை உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியாக, உ.பி.,யில் வரும் 7ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்து, 10ம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
எனவே, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயிக்க உள்ளன. உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 2014ம் ஆண்டுக்குப் பின், முதன் முறையாக, 110 டாலரை எட்டியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள், 2021 நவ., இறுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுத்தி வைத்தன. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 81.5 டாலராக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள் ௧ லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு சராசரியாக 5.70 ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்து
வருகின்றன.

‘அதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு, 9 ரூபாய் உயர்த்தினால் தான் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை தடுக்க முடியும்’ என, ஜே.பி.மார்கன் நிறுவனத்தின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்த்தினால், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான கலால், ‘வாட்’ வரிகளை குறைத்து, விலை அதிகம்
உயராமல் பார்த்துக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உக்ரைன் போரால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டால், ஏப்ரல் – ஜூன் காலாண்டில், அதன் விலை, 150 டாலரை எட்டும். எனினும், அக்., – டிச.,ல் 86 டாலராக குறைய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு நெருக்கடி?

உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவுக்கு அடுத்து ரஷ்யா உள்ளது. இங்கு தினமும் 1.10 கோடி பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. இதில், உள்நாட்டு தேவை போக, 60 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்
ஏற்றுமதியாகிறது. இதில், 25 லட்சம் பேரல்கள், ஜெர்மனி, போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. சீனா தினமும், 16 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால், ‘ஜி7’ கூட்டமைப்பு நாடுகள், ரஷ்ய கச்சா எண்ணெய்
இறக்குமதியை குறைத்துக் கொள்ள உள்ளன. இது, கச்சா எண்ணெய் வருவாயை பெரிதும் சார்ந்துள்ள ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு, 10 சதவீத அளவிற்கே உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.