`பெரியார் டு உதயநிதி…' – மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்!

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றபோது பிரதான கட்சியினரைவிட சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களே அதிக கவனம் ஈர்த்தனர்.

மு.க.ஸ்டாலின் படத்துடன் வந்த உறுப்பினர் லக்‌ஷிகாஸ்ரீ

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் என 322 உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில், திமுக சார்பில் 67, காங்கிரஸ் சார்பில் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேரும், ம.தி.மு.க சார்பில் 3 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும் என 80 மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். அ.தி.மு.க 15, பா.ஜ.க 1, சுயேச்சைகள் 4 பேர் என மொத்தம் 100 உறுப்பினர்கள் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

செங்கோலுடன் அதிமுக உறுப்பினர் சோலைராஜா

இதில் 55-வது வார்டு தி.மு.க மாமன்ற உறுப்பினர் விஜயாகுரு தவிர்த்து, 99 மாமன்ற உறுப்பினர்கள் வரிசைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தி.மு.க உறுப்பினர்கள் `கலைஞர் வாழ்க… ஸ்டாலின், உதயநிதி வாழ்க…’ என்று கூறி பதவிப் பிரமாணம் செய்தனர்.

விசிக உறுப்பினருக்கு மோதிரம் அணிவித்தல்

சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரியின் மனைவி பானு முபாரக், இறைவன், கலைஞர், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார்.

பா.ஜ.க-வின் ஒரே உறுப்பினர் பூமா ஜனாஸ்ரீ முருகன், `பாரத் மாதா கி ஜே…’ என்று கூறி பதவி ஏற்றார்.

பானு முபாரக் மந்திரி

தி.மு.க உறுப்பினர்களோ, மு.க.ஸ்டாலின், உதயநிதி, உள்ளூர் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பெரியார், அண்ணா பெயரை மறந்து விட்டார்கள். அதனால், “மு.க.ஸ்டாலின் சொன்ன திராவிட மாடல் இதுதானா” என்று வந்திருந்த சீனியர்கள் புலம்பினார்கள்.

அ.தி.மு.க உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, செல்லூர் ராஜூ பேரை கூறி பதவி ஏற்றார்கள். எடப்பாடி, ஓ.பி.எஸ் பெயரை குறிப்பிடவில்லை.

மதுரை மாநகராட்சி

வி.சி.க-வின் ஒரே உறுப்பினர் முனியாண்டி அம்பேத்கர், பெரியார் பெயரைச் சொல்லி பதவி ஏற்றார். பின்னர், வெளியில் வந்து திருமாவளவன், மு.க.ஸ்டாலின் வாழ்க என்று கோஷமிட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மோதிரம் அணிவித்தனர்.

எதிர்க்கட்சித்தலைவர் என்று கூறப்படும் அ.தி.மு.க-வின் சோலை ராஜா, பதவி ஏற்று வெளியில் வந்ததும் அவர் ஆதரவாளர்கள் தங்க நிறத்தில் ஆளுயர செங்கோல் வழங்கினார்கள்.

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

தி.மு.க-வைச் சேர்ந்த இளம் வேட்பாளர் லக்‌ஷிகாஸ்ரீ மு.க.ஸ்டாலின் படத்தை கையில் வைத்துக்கொண்டே பதவி ஏற்றார். `ஆஹா… இந்த ஐடியா தெரியாமல் போச்சே’ என்று தி.மு.க உறுப்பினர்கள் சிலர் புலம்பினார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதவி ஏற்றுக்கொண்டது கலகலப்பாக இருந்தது. மேயருக்கான மறைமுக தேர்தல் 4-ம் தேதி காலை 9 மணிக்கும், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் 2.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.