மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்: ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி; ஒரு நகராட்சியை கூட கைப்பற்றாத நிலையில் பிஜேபி, காங்கிரஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகளை மாநிலதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள மொத்தமுள்ள 107 நகராட்சிகளில் 93 இடங்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், கைப்பற்றியுள்ளது. 7 நகராட்சிகளில் திரிணாமுல் முன்னிலையில் உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் மற்றும் ஹம்ரோ ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தல், அடுத்துவந்த இடைத்தேர்தல், கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் என தொடர்ச்சியாக வெற்றி முத்திரையை பதிவு செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி, பெரும்பான்மையான முனிசிபாலிட்டி வார்டுகளை வென்று உள்ளாட்சியிலும் தனது பலத்தை வலுப்படுத்தியுள்ளது. நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் நகராட்சியில் இடது முன்னணி வெற்றி பெற்றது. கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த பாஜகவால், நகராட்சி தேர்தலில் ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரசும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேற்கு வங்கத்தில் தேர்தல் என்ற பெயரில் ஜனநாயகம் கேலி கூத்திற்கு ஆளாகி இருப்பதாக பிஜேபி தெரிவித்தது. ஆனால் பிஜேபியின் குற்றச்சாட்டு அடிப்படை ஏதும் இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட ஹம்ரோ கட்சி டார்ஜிலிங் நகராட்சியில் வெற்றி பெற்றது. மகத்தான வெற்றிக்கு பின் ட்வீட் செய்த மம்தா, ‘ உள்ளாட்சித் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி நமது பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் அதிகரிக்கட்டும். மாநிலத்தின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம் என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.