ஸ்டாலினுக்கு `அரவிந்தன்' போல; உதயநிதிக்கு…? -அப்பா பாணியில் அரிதாரத்திற்கு குட்பை!

“அரவிந்தன்“ என்கிற வலுவான ஒரு கதாபாத்திரம் மூலம் தனது திரையுலக பாத்திரத்திற்கு முடிவுரை கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில் அவரது மகன் உதயநிதியும் வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு தனது திரையுலக பயணத்திற்கு முடிவுரை எழுதும் முடிவினை எடுத்திருக்கிறார்.

நடிகராக ஸ்டாலின்

தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் அரசியலுக்குள் அடி எடுத்துவைத்தபோதே, திரைப்படத்துறையிலும் நடிகராகக் களமிறங்கினார். குறிப்பாக அன்றைக்கு தி.மு.கவின் பிரசாரத்திற்கு `முரசே முழங்கு’ என்கிற நாடகத்தினை தமிழகம் முழுவதும் நடத்தினார். அதனைத் தொடர்ந்து `நீதி தேவன் மயங்குகிறான்’, `நாளை நமதே’ உள்ளிட்ட நாடகங்களிலும் நடித்துவந்தார். தி.மு.க வினர் மத்தியில் கருணாநிதியின் மகன் என்கிற அடையாளத்தைத் தாண்டி நடிகராக மு.க.ஸ்டாலின் பரிணமித்த காலம் அது. நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் தனியாக படத்தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் ஸ்டாலின்.

அந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்களையும் தயாரித்த ஸ்டாலினுக்கு அடுத்து வெள்ளித்திரைக்குள் நடிகராக நுழையும் ஆசையும் வந்தது. முப்பது வயதைக் கடந்த நிலையில் வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார் ஸ்டாலின். குறிப்பாக கருணாநிதியின் வசனத்தில் `மக்கள் ஆணையிட்டால்” என்கிற படத்தில் நடித்தார். மேலும் `ஒரே ரத்தம்’ என்கிற திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து படித்து பட்டம் பெற்ற ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சாதிய பாகுபாடு பற்றியும், ஏற்றத் தாழ்வினால் சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றியும் அனல் பறக்கும் வசனங்களை பேசி ஸ்டாலின் நடித்திருந்தார்.

ஒரே ரத்தம் திரைப்படத்தில் ஸ்டாலின்

இதன் தொடர்ச்சியாக 80-களின் இறுதியில், தொலைக்காட்சி தொடர்கள் வளர ஆரம்பித்த நேரம் என்பதால் தொடர்களில் நடிக்கும் ஆசையும் ஸ்டாலினுக்கு வந்தது. `குறிஞ்சி மலர்’ என்கிற நாடகத்தில் `அரவிந்தன்’ என்கிற கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடத்திருந்தார். `அரவிந்தன்’ என்கிற கதாபாத்திரம் சமூகத்தில் மண்டிக்கிடக்கிற அவலங்களை எதிர்த்துப் போராடும் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள இளைஞனாக நடித்திருப்பார். இந்தக் கதாபாத்திரம் ஸ்டாலினுக்கு தனித்த அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்தது. இந்த வலுவான ஒரு கதாபாத்திரம் நடித்த பிறகு தனது திரையுலக பாத்திரத்திற்கு முடிவுரை கொடுத்தார் ஸ்டாலின். அந்த வகையில் அவரின் மகன் உதயநிதியும் வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு தனது திரையுலக பயணத்திற்கு முடிவுரை எழுதும் முடிவினை எடுத்திருக்கிறார்.

அந்த காலத்தில், `குறிஞ்சி மலரின் கதாநாயகனே!’ என்று தி.மு.க வினர் ஸ்டாலினைக் கொண்டாடினர். தங்களின் குழந்தைகளுக்கு குறிஞ்சி மலர் தொடரின் பாத்திரங்களான பூரணி, அரவிந்தன் என்கிற பெயர்கள் அதிகம் வைக்கப்பட்டது. இப்படி நாடகத்திலிருந்து வெள்ளித்திரை வரை பயணித்த ஸ்டாலின் குறிஞ்சி மலர் தொடரோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இந்தத் தொடர் வெளியாகி சில ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலின், அடுத்து சென்னை மாநகராட்சி மேயர் என்கிற பொறுப்பான பதவிக்கும் வந்துவிட்டார்.

நெஞ்சுக்கு நீதி சூட்டிங்கில் உதயநிதி ஸ்டாலின்

அந்த வரிசையில் இப்போது அவரது வாரிசான உதயநிதியும் அதே பாணியில் சினமாவிற்கு விரைவில் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார். 2008-ம் ஆண்டு ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்கிற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த உதயநிதி அடுத்த சில ஆண்டுகளில் திரைப்பட நடிகராகவும் அவதாரம் எடுத்தார். ஆரம்பத்தில் காமெடி படங்களில் அதிக கவனம் செலுத்தியவர் ஒருகட்டத்தில் சமூக ரீதியான கருத்துகளை சொல்லும் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள உதயநிதிக்கு விரைவில் `நெஞ்சுக்கு நீதி’ என்கிற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்கிற கருத்து கட்சிக்குள் வலுவாக எழுத்துள்ளது.

ஆனால், திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சர் பதவியை கவனிப்பது கடினம் என்பதால், அப்பா பாலிஸியில் முழுவதுமாக நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள உதயநிதி முடிவெடுத்திருக்கிறார். இதனால் சமூக ரீதியான படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதயநிதியின் கடைசி படத்திற்கான கதையை தயாரிக்க சொல்லியிருந்தார்.அவரும் அரசியலும், சமூக கருத்தும் உள்ள ஒரு வலுவான கதைக்களத்தை உதயநிதிக்காக தயார் செய்துள்ளார். `குறிஞ்சி மலர்’ படத்தின் `அரவிந்தன்’ கேரக்டர் போல, உதயநிதியின் கேரக்டரும் பேசப்பட வேண்டும் என்பதில் இயக்குநர் மட்டுமல்ல, முதல்வர் ஸ்டாலின் வரை விரும்புகிறார்கள். இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஸ்டாலின் இல்லத்திற்கு வந்தபோது ஸ்டாலினும் தனது மகனின் இறுதி படம் ஒரு சாதனை சகாப்தமாக இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் – மாரி செல்வராஜ்

இதனால் கதையில் பல திருத்தங்களை அவ்வப்போது செய்து, வலுவான ஒரு அரசியல் கதாபாத்திரத்தோடு உதயநிதி கடைசியாக நடிக்கும் திரைப்படம் இருக்கும்

“சினமாவையும் எங்கள் குடும்பத்தையும் பிரித்துப் பார்கக முடியாது” என்று தனது சுயசரிதை நுாலில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் உதயநிதி சினிமாவில் கிடைத்த புகழை அரசியல் களத்தில் அரங்கேற்றி, இப்போது அமைச்சராக பதவியேற்று, அரிதாரத்திற்கு விடைகொடுக்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.