உற்பத்தி துறையில் ஆற்றல் மிக்கதாக இந்தியாவை உலகம் காண்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: உங்களின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது பெருமிதம் கொள்ளுங்கள், அதே போல் இந்தப் பெருமித உணர்வை உங்களின் இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலை நிறுத்துங்கள் என இந்திய உற்பத்தி நிறுவனங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திரு மோடி இன்று உரையாற்றினார். பிரதமரால் உரை நிகழ்த்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய எட்டாவது இணையவழிக் கருத்தரங்காகும் இது. இந்தக் கருத்தரங்கிற்கு உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்பது மையப் பொருளாக இருந்தது. இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:

தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி என்பதற்கு பல முக்கிய அம்சங்களை பட்ஜெட் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடு வெறும் சந்தை என்பதோடு முடிந்துவிடுவது ஏற்புடையது அல்ல.

மறுபக்கம் உறுதியுடன் இந்தியாவில் உற்பத்தி என்பதை நோக்கிய முன்னேற்றத்திற்கு இளைய மற்றும் திறன் வாய்ந்த மக்கள் தொகையின் பங்கு, ஜனநாயகக் கட்டமைப்பு இயற்கை வளங்கள் போன்ற ஆக்கப்பூர்வமான நிலைமைகள் நம்மை ஊக்கப்படுத்த வேண்டும். செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து குறைபாடு இல்லாத, தலையீடில்லாத பொருள் உற்பத்திக்குத் தாம் அழைப்பு விடுத்தேன். தேசப் பாதுகாப்பு என்ற முப்பட்டகத்திலிருந்து நாம் பார்த்தால் தற்சார்பு இந்தியா என்பது அனைத்தையும்விட முக்கியமானது.

பொருள் உற்பத்தி துறையில் ஆற்றல் மிக்க இடமாக இந்தியாவை உலகம் காண்கிறது. இந்தியாவின் ஜிடிபி-யில் பொருள் உற்பத்தி 15 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் உற்பத்தியில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியாவில் மிக அதிகமான பொருள் உற்பத்தியை உருவாக்க முழு பலத்துடன் நாம் பணியாற்ற வேண்டும்.

வெளிநாட்டு நிதியாதாரங்களை சார்ந்திருக்கும் நிலையை அகற்றி செமி கடத்திகள், மின்சார வாகனங்கள் போன்றவற்றின் தயாரிப்பில் புதிய தேவை மற்றும் வாய்ப்புகள் உதாரணம். அதே போல் உள்நாட்டு உற்பத்திக்கு எஃகு மருத்துவச் சாதனங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்கள் கிடைப்பதற்கும், இதற்கு மாறாக மற்ற பொருட்கள் கிடைப்பதற்கும் இடையேயான வேறுபாட்டை சந்தையில் வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவின் பல்வேறு விழாக்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் வெளிநாட்டு பொருட்களை அதிகம் காண்பது நமக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை உள்ளூர் தயாரிப்புகள் மூலம் எளிதாக கிடைக்கச் செய்ய முடியும். தீபாவளியின் போது அகல் விளக்குகள் வாங்குவது உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற எல்லையைத் தாண்டி சென்றுள்ளது.

தங்களின் சந்தைப்படுத்துதல் மற்றும் குறியீடு செய்தல் முயற்சிகளில் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மற்றும் தற்சார்புக்கு ஊக்கமளிக்க தனியார் துறையினரை கேட்டுக் கொள்கிறேன். உங்களின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது பெருமிதம் கொள்ளுங்கள், அதே போல் இந்தப் பெருமித உணர்வை உங்களின் இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலை நிறுத்துங்கள்.

உள்ளூர் பொருட்களுக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது அவசியம் . ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவை அதிகப்படுத்துமாறும், தங்களின் உற்பத்திப் பொருட்களில் பன்முகத்தன்மையை உருவாக்கி மேம்படுத்த வேண்டும். 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறு தானியங்களுக்கான தேவை உலகில் அதிகரித்துள்ளது. உலக சந்தைகளை ஆய்வு செய்வதன் மூலம், அதிகபட்ச உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் செய்வதற்கு நமது ஆலைகளை நவீனமாக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

சுரங்கப் பணிகள், நிலக்கரி, பாதுகாப்பு போன்ற துறைகள் திறந்துவிடப்பட்டதன் காரணமாக புதிய வாய்ப்புகள் உள்ளன. புதிய உத்திகளுக்கான தயாரிப்பில் பங்கேற்க வேண்டும். உலகத்தரங்களை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்பதோடு உலகளாவிய போட்டியையும் நீங்கள் சந்திக்க வேண்டும்.

கடன் வசதி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசும், இந்தத் துறைக்கான ரூ.6,000 கோடி ராம்ப் (திட்டங்களுக்கான இடர் பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை) திட்டத்தை அறிவித்துள்ளது. விவசாயிகள், பெருந்தொழில்கள், எம்எஸ்எம்இ-க்களின் உற்பத்திப் பொருட்களுக்கு புதிய ரயில்வே போக்குவரத்தை உருவாக்குவதிலும், பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சட்டத்திருத்தங்கள், ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். பெருமளவில், மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான பிஎல்ஐ திட்டம், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு உற்பத்தி என்ற இலக்கை 2021 டிசம்பரில் எட்டியது. மற்ற பிஎல்ஐ திட்டங்கள் அமலாக்கத்தின் முக்கியமான கட்டங்களில் உள்ளன.

25,000 புகார்கள் சரி செய்யப்பட்டிருப்பதும், உரிமங்கள் தாமாகவே புதுப்பிக்கப்படுவதும், புகார்களின் சுமையைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்க வழி செய்துள்ளது. அதே போல், டிஜிட்டல்மயம், ஒழுங்குப்படுத்தும் கட்டமைப்பில் வேகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவந்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.