உள்ளாட்சியிலும் மலர்ந்தது திமுக ஆட்சி: 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டி….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில் 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது. உள்ளாட்சி யிலும் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதால், உள்ளாட்சியிலும் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  நடைபெற்று முடிந்தது. அதன்படி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி கள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, 22ந்தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

21 மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 1374 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில், 1373 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  திமுக 952 வார்டுகளை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 164, காங்கிரஸ் 73, மார்க்சிஸ்ட் 24, பாஜக 22, மதிமுக 21, விசிக 16, சிபிஐ 13, முஸ்லீம் லீக் 6, பாமக 5, அமமுக 3, எஸ்டிபிஐ 1 வெற்றி பெற்றுள்ளனர்.

138 நகராட்சிகளில் உள்ள மொத்தமுள்ள 3843 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 3842 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக 2360 இடங்களை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638, காங்கிரஸ் 151, பாஜக 56, பாமக 48, சிபிஎம் 41, மதிமுக 34, அமமுக 33, விசிக 26, முஸ்லீம் லீக் 23, சிபிஐ 19, தேமுதிக 12, எஸ்டிபிஐ 5, பகுஜன் சமாஜ் 3, மமக 4, ஐஜேகே 2 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

489 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 7621 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியாகி உள்ளது.  இதில் 7603 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,  4,388 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 1206,  காங்கிரஸ் 368,  பாஜக 230,  சிபிஎம் 101,  பாமக 73, அமமுக 66, விசிக 51, மதிமுக 34, சிபிஐ 26, தேமுதிக 23, எஸ்டிபிஐ 16, மமக 13, முஸ்லீம் லீக் 12, நாம் தமிழர் 6, புதிய தமிழகம் 3, மார்க்சிஸ்ட் (மா.லெ) 1, ஐஜேகே 1, என்சிபி 1, பகுஜன் சமாஜ் 1, மஜக 1, தமமுக 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்படும் பதவிகள் குறித்து  தி.மு.கவின் முதன்மை நிலைய செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி இறுதி முடிவுக்கு வந்தனர். இதையடுத்து இன்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் நேற்று (மார்ச் 2ந்தேதி) கவுன்சிலர்களாக பதவி ஏற்றனர்.. இதையடுத்து,  மேயர், துணைமேயர் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு நாளை (மார்ச் 4ம் தேதி)  மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் குறித்த தகவலை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமை கட்சியான திமுக அறிவித்து உள்ளது.

அதன்படி, தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் பதவியும் சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சி.பி.எம். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியைப் பெறுகிறது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி உள்பட பல பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும் ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளும் பெண்ணாடம், காடையாம்பட்டி, பொ.மல்லபுரம் ஆகிய பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நகராட்சித் துணைத் தலைவர் பதவியைப் பொறுத்தவரையில் திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை ஆகியவை வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ம.தி.மு.கவுக்கு ஆவடி துணை மேயர் பதவியும் மாங்காடு நகராட்சித் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகியவற்றின் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திருவேங்கடம், ஆடுதுறை, சென்னசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளும் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக, திமுக மட்டும் 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது. அதன் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 21 மாநகராட்சி சென்னை உள்பட 20 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது. அதுபோல, சென்னை உள்பட 15 மாநகராட்சிகளின் துணைமேயர் பதவிகளுக்கும் திமுக போட்டியிடுகிறது.

மொத்தமுள்ள 138 நகராட்சிகளுக்கான தலைவர் பதவியில், திமுக மட்டும் 126 இடங்களில் திமுக தனித்து போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 12 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோல நகராட்சி துணைத்தலைவர் பதவிகளில் 116 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 22 இடங்கள் ஒதுக்கி உள்ளது.

மொத்தமுள்ள  489 பேரூராட்சிகளில், திமுக மட்டும் 468 இடங்களில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 21 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு திமுக 456 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 33 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில், தலைவர், துணைத்தலைவர்களில் 1201 இடங்களில் திமுக போட்டியிட்டு, அதிகாரத்தை கைப்பற்றுகிறது.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  தேர்தல் பிரசாரத்தின்போது, கூறியபடி, உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் விவரம் – சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 28வயதான பிரியா பெயர் அறிவிப்பு!

நகராட்சி மன்றத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் – முழு விவரம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.