கடுமையாக உயரும் கச்சா எண்ணெய் விலை: 8 ஆண்டுகளில் இல்லாத லாபம் ஈட்டும் ஓஎன்ஜிசி

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா பாதிக்கப்படும் என அச்சம் உள்ள நிலையில் கச்சா எண்ணெய் தோண்டி எடுக்கும் இந்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. நேற்று இதன் விலை 110 டாலர்களாக உயர்ந்தது.

ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடரும் என பாங்க் ஆஃப் பரோடா ஆய்வு அறிக்கை தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் கச்சா எண்ணெய் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

ப்ராண்ட் கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தகத்தில் இன்று 118 டாலர்களை கடந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறைவதற்கான அறிகுறிகள் இல்லாததால் ஏறக்குறைய 3 சதவீதம் உயர்ந்தது.

வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பின் உறுப்பினர்களால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது.

வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 145 டாலராக ஆகலாம் என்று தரகு நிறுவனமான டிடி செக்யூரிட்டீஸ் எச்சரித்துள்ளது. உக்ரைன் நெருக்கடியின் காரணமாக பீப்பாய் கச்சா எண்ணெய் 125 டாலராக உயர்ந்து வருவதாக மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா பாதிக்கப்படும் என அச்சம் உள்ளது. அதேவேளையில் இந்தியாவில் கச்சா எண்ணெய் தோண்டி எடுக்கும் நிறுவனமான ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகவும் நன்மை பயக்கும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலையில் ஒரு பீப்பாய்க்கு 1 டாலர் உயர்வுக்கு ஓஎன்ஜிசியின் மதிப்பீடுகளில் 2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு இதுவரை இந்நிறுவனத்தின் பங்குகள் 17 சதவீதம் உயர்ந்துள்ளன.

ஓஎன்ஜிசி பங்குகள் இன்று 3.4 சதவீதம் வரை உயர்ந்தன, ஏனெனில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை எட்டு ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவை எட்டியதால் அந்த லாபத்தை ஓஎன்ஜிசி பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.