’போரை நிறுத்த புதினுக்கு நான் உத்தரவிட முடியுமா?’- நெட்டிசன்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதிலடி

புதுடெல்லி: ரஷ்ய தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியது: ”உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை மீட்க என்ன நடவடிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எடுத்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் எனக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் புதினை போரை நிறுத்துங்கள் என்று என்னால் உத்தரவிட முடியுமா? அது என் அதிகார வரம்பிலா இருக்கிறது? இந்திய மாணவர்களின் நிலையைக் குறித்து அனைவருக்குமே வருத்தம் உள்ளது. மாணவர்களை பத்திர்மாக மீட்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தனது கடமையைச் செய்கிறது” என்று கூறினார்.

தொடர்ந்து அட்டர்னி ஜெனரலிடம், மீட்புப் பணிகளில் இயன்ற உதவியை செய்யுமாறு நீதிபதி ரமணா உத்தரவிட்டார். ஆபரேஷன் கங்கா என்ற செயற்திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்திய மாணவர்களை உக்ரைனிலிருந்து மீட்டு வருகிறது.

முன்னதாக, உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

ஆனால், உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து செய்தித் தொலைக்காட்சிகளுக்கு வீடியோக்கள் மூலம் இந்திய மாணவர்கள் தங்களின் நிலையைப் பகிர்ந்துள்ளனர். ’எல்லைகளுக்கு வர எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. ஓரிரு ரயில்கள் இயக்கப்படும்போது அதில் ஏற உக்ரைன் அதிகாரிகளும், மக்களும் அனுமதிப்பதில்லை. எங்களை எட்டி உதைத்து வெளியே தள்ளிவிடுகின்றனர்’ என்று மாணவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சில வீடியோக்களும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. வாகனங்கள் இல்லாவிட்டால் நடந்தே மேற்கு எல்லைகளுக்கு வருமாறு இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அறிவுறுத்திய நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களில் கடுமையான தாக்குதல் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.