மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்கள்… முந்தைய அரசுகள் மீது குற்றம்சாட்டும் பிரதமர் மோடி

வாரணாசி:
போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் இருந்து ‘ஆபரேசன் கங்கா’ திட்டம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. 
அவ்வகையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய உத்தர பிரதேச மாணவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது, அதிக அளவிலான இந்திய மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு முந்தைய அரசுகளே காரணம் என குற்றம்சாட்டினார். 
மாணவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
உக்ரைனில் கடும் சிரமங்களை எதிர்கொண்ட பிறகு, தன்மீதுகூட கோபத்தை வெளிப்படுத்திய மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்வதாக மோடி தெரிவித்தார். 
“இதுபோன்ற நெருக்கடியில் அவர்கள் கோபப்படுவது இயற்கையானது. அவர்கள் கஷ்டங்களையும் குளிரையும் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் ஆத்திரப்படாமல் மீட்பு நடவடிக்கையை புரிந்து கொள்ளத் தொடங்கும்போது, அவர்கள் தங்கள் அன்பையும் காட்டுவார்கள். பல மாணவர்கள் எனக்கு நன்றி தெரிவித்ததோடு, நம்பிக்கை இழந்த நிலையில் அவர்களை மீட்டதற்காக அரசாங்கத்தைப் பாராட்டினர்.
மருத்துவக் கல்வி கொள்கைகள் முன்பு சரியாக இருந்திருந்தால், நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டியதில்லை.  எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் இவ்வளவு இளம் வயதில் வெளிநாடு சென்று படிப்பதை விரும்ப மாட்டார்கள். கடந்த கால தவறுகளை சரி செய்ய எங்கள் அரசு பணியாற்றி வருகிறது. இதற்கு முன்பு 300 முதல் 400 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது கிட்டத்தட்ட 700 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 80 முதல் 90 ஆயிரமாக இருந்த மருத்துவ படிப்பு இடங்கள் 1.5 லட்சமாக அதிகரித்துள்ளது. 
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும். இதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த 70 ஆண்டுகளில் இருந்ததை விட, வரும் 10 ஆண்டுகளில் அதிக மருத்துவர்கள் உருவாக்கப்படுவார்கள்” என்றும் பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.