உக்ரைன் அணுஉலை மீது ரஷ்யா தாக்குதல்: மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என வெளியுறவு அமைச்சர் கவலை

கீவ்: உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் அங்குள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதுதான் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய அணுஉலை எனக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலை அணுஉலை அமைந்துள்ள ஜேப்போரிஜியா பகுதிக்கு அருகாமையில் உள்ள உக்ரைன் நகரத்தின் மேயர் உறுதி செய்துள்ளார். அணுஉலையின் இயக்குநர் ஆண்ட்ரெய் டுஸ் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரஷ்யப் படைகள் அணுஉலை மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

இப்போதைக்கு கதிர்வீச்சு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இயங்குகின்றன. இருப்பினும் அணுஉலையில் பற்றி எரியும் தீயை அணைக்கவிடாமல் உக்ரைன் தீயணைப்பு வீரர்களை ரஷ்யப் படையினர் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவித்தார்.

இது குறித்து வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஷ்யப் படைகள் ஜேப்பரோஜியா அணுசக்தி கூடம் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. அங்கே தீ பற்றி எரிகிறது. அணுஉலை வெடித்துச் சிதறினால் செர்னோபில் போன்று 10 மடங்கு அழிவு ஏற்படும். ரஷ்யா உடனடியாக தாக்குதலை நிறுத்தி, தீயணைப்பு வீரர்கள் அணுஉலை தீயை அணைக்க உதவி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

;

கடந்த 2 நாட்களாகவே ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல்கலைக்கழகங்கள், காவல்துறை அலுவலகங்கள், அரசுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் என அந்நாட்டின் உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் தாக்குதலை நடத்தும் ரஷ்யா மீது போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. தொடக்கியுள்ளது.

ரஷ்யாவின் பெரும் பணக்காரரான அலிஷர் உஸ்மானோவுக்கும், ரஷ்ய முன்னாள் துணைப் பிரதமர் ஐகர் ஷுவலாவுக்கும் பிரிட்டன் தடை விதித்துள்ளது.

தடைகள் எத்தனை தொடர்ந்தாலும் திட்டமிட்டபடி தாக்குதல் நடக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி தாக்குதல்.. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சியில் பேசும்போது, உக்ரைன் மீதான தாக்குதல் திட்டமிட்டபடி தொடரும் எனக் கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்யப் படைகள் நாஜிக்கள் ஆதரவாளர்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இதற்கிடையில் உக்ரைனிலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் தடை: பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களும் ரஷ்யாவில் தனது சேவையை கிடைக்கப்பெறாமல் செய்துள்ளது. முன்னதாக தனது தளத்தில் ரஷ்ய அரசு ஊடகங்கள் விளம்பரம் செய்ய முடியாமல் பேஸ்புக் தடை விதித்தது. ரஷ்யா டுடே, ஸ்புட்னிக் போன்ற அரசு செய்தி ஊடகங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.