பிரதமர் மோடி பொய்யின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கிறார்: ராகுல் காந்தி

உ.பி சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கிய நிலையில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 6 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனால்,  உபியில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், உ.பி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தனது முந்தைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பிரதமர் மோடி இப்போது பேசவில்லை.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது. ஒரு குவிண்டால் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.2500 என நிர்ணயித்தது.

பிரதமர் மோடி தர்மத்தின் பெயரால் அல்ல.. மாறாக பொய்களின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கிறார்.  இந்து மத புத்தகங்கள் எங்கும் பொய் பேச வேண்டும் என்று கூறவில்லை. பிரதமர் மோடியின் இரட்டை இயந்திரம் ஒன்று அதானி மற்றொன்று அம்பானி. இந்த வகையான இரட்டை இயந்திரம் ஒருபோதும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காது.

பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உ.பி மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றுடன் மூன்றாவது பிரச்சனையாக தெருவில் சுற்றும் மாடுகளின் வடிவில் சேர்த்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..  உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் தாமதம் ஏன்? மம்தா கேள்வி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.