9-வது நாளாக சண்டை நீடிப்பு- கீவ், கார்கிவ் நகரங்களில் ரஷிய படைகள் திணறல்

கீவ்:

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷியா, கடந்த மாதம் 24-ந் தேதி அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது.

உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு போதும் சரண் அடையமாட்டோம் என்று சொல்லி பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்.

ரஷியா- உக்ரைன் இரு தரப்பிலும் நிறைய உயிரிழப்புகளும், பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களும் சேதம் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) 9-வது நாளாக போர் நீடித்தது.

இன்று காலை கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. தெற்கு பகுதியில் மற்றொரு ரஷிய படை கெர்சான் நகரை பிடித்துவிட்டு தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கிறது.

இதற்கிடையே சுமி உள்பட மற்ற சிறிய நகரங்களையும் குறி வைத்து ரஷியா தாக்குதலை நடத்துகிறது.

தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகிய 2 நகரங்களையும் குறி வைத்து ரஷிய ராணுவம் படைகளை நகர்த்தி உள்ளது. அந்த 2 நகரங்களிலும் புறநகர் பகுதிகளில் ரஷியா படைகளை குவித்துள்ளது. ஆனால் இதுவரை அந்த 2 நகரங்களுக்குள்ளும் ரஷிய படைகளால் செல்ல இயலவில்லை.

உக்ரைன் மக்களின் கடும் ஆவேசமான எதிர்ப்பு காரணமாக ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேற முடியாமல் திணறலை சந்தித்துள்ளன. கடும் தாக்குதல் நடத்தினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்பதால் ரஷிய படைகள், உக்ரைன் அரசு அலுவலகங்களை அதிகளவில் குறிவைத்து தாக்குதலை நடத்துகின்றன.

இதனால் உக்ரைன் மக்கள் ரஷிய பீரங்கி படைகள் தொடர்ந்து முன்னேற முடியாதபடி எதிர்தாக்குதலை தொடங்கி உள்ளனர். இது ரஷிய படைகளுக்கு கடும் சவாலாக மாறி உள்ளது.

கீவ் நகரை கைப்பற்றும் போது முழுமையாக அதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 64 கி.மீட்டர் தொலைவுக்கு நீண்ட ராணுவ அணிவகுப்பை ரஷியா தயார் நிலையில் வைத்து இருந்தது. ஆனால் எரிபொருள் கிடைக்காததாலும், உணவு பொருட்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து சேராததாலும் வீரர்கள் சோர்வடைந்து உள்ளனர்.

இது ரஷிய அணிவகுப்பை முடங்க செய்துள்ளது. திட்ட மிட்டபடி ரஷிய வாகன அணிவகுப்பு கீவ் புறநகர் பகுதிக்கு செல்ல இயல வில்லை. இதனால் முக்கிய நகரங்களை ரஷியா கைப் பற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்… உக்ரைன் தலைநகரில் இந்திய மாணவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது – மத்திய மந்திரி தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.