ஹே சினாமிகா விமர்சனம்: அர்ஜென்டினிய இறக்குமதி… ஆனால், செய்த மாற்றங்கள் கைகொடுக்கின்றனவா?

இயற்கைப் பேரிடர் ஒன்று நடைபெறும் நாளில் துல்கருக்கும் அதிதி ராவுக்கும் காதல் பூக்கிறது. ஒரே பாடலில் காதலுடன் திருமணமும் நடந்துமுடிந்துவிட, கதை அதன் பின்னர்தான் ஆரம்பிக்கிறது.

Hey Sinamika

துல்கருக்குப் பேசுவது என்பது அவ்வளவு பிடிக்கும். ஆனால், மிகப்பெரிய பிரச்னை அவரைப் பிடிக்காமல் போகும் அளவுக்கு பேசிக்கொண்டே இருப்பார். இதிலிருந்து எப்படித் தப்பிப்பதென தலைகால் புரியாமல் அசலூருக்குச் செல்கிறார் அதிதி. ஆனால், அதற்கு முன்பே அங்கும் வந்துவிடுகிறார் துல்கர். இனி வேறு வழியே இல்லையென மனநல ஆலோசகர் காஜல் அகர்வாலின் உதவியை நாடுகிறார். ‘இந்த உலகில் எந்த ஆணுமே நல்லவர் இல்லை’ என்கிற கோட்பாடுடன் வாழும் காஜலுக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய அசைன்மெண்ட் துல்கர்தான். துல்கர் தவறு செய்தாரா, விடுதலை யாருக்குக் கிடைத்தது என்பதையெல்லாம் சொல்லி நகர்கிறது ‘ஹே சினாமிகா’.

படத்தின் மிகப்பெரிய பலம் துல்கரின் நடிப்பு. தன்னைச் சுற்றியிருப்பவர்களை வெறுக்க வைத்து, அதே சமயம் உலகையே ஈர்க்கக்கூடிய கதாபாத்திரம். இரண்டுக்குமான மீட்டரிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். வெறுப்பினால் வரும் பிரிவையும், அதன் பின் மனதினுள் நிகழும் மாற்றங்களால் முடிவு குறித்து புலம்புவதுமாக அதிதி. காமெடி காட்சிகளில் சற்று அதிதி ஓவர்டோஸ் என்றாலும், எமோஷனல் காட்சிகளில் பிரமாதமாக நடித்துக்கொடுத்திருக்கிறார். இவர்களுக்குப் பக்கபலமாக மிர்ச்சி விஜய், நக்ஷத்திரா, தாப்பா, அபிஷேக் குமார். இதில் மிர்ச்சி விஜய் மட்டும் சிரிக்க வைக்கிறார். எல்லா படத்திலும் யோகி பாபு இருக்க வேண்டும் என்பது அவசியம் எனப் புரிகிறது. அதனாலேயே இந்தப் படத்திலும் யோகி பாபு இருக்கிறார். மற்றபடி அவர் சம்பந்தப்பட்ட ‘காமெடி’… வெரி சாரி பாஸ்!

Hey Sinamika

‘A Boyfriend for My Wife’ என்கிற பிளாக்பஸ்டர் அர்ஜென்டினா படத்தைத் தமிழுக்கு அதிகாரபூர்வமாக இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஒரிஜினலின் பெயர், எழுதியவர் பெயர் எல்லாவற்றையும் முழு ஸ்லைடு போட்டதற்கு நன்றி. ரீமேக் படங்கள் எடுக்கும் பலரும் இதைப் பின்பற்றலாம். கதைமாந்தர்களின் பாலினத்தையும், காஜல் கதாபாத்திரத்தையும் மாற்றியிருக்கிறார்கள்.

படத்துக்கான கதை, திரைக்கதை , வசனம் எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி. நடன அமைப்பாளர் பிருந்தா முதல் முறையாக இயக்கியிருக்கிறார். எமோஷனல் காட்சிகள், கதை நகரும் விதம் எல்லாமே கதையுடன் பொருந்தி வருவதால் யாதொரு குறையுமில்லை. கோவிந்த் வசந்தா இசையில் மூன்று பாடல்கள் அட்டகாசம். பிரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவும், ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பும் கதையை சிறப்பாக நகர்த்த உதவியிருக்கிறது.

படத்தின் பிரச்னை காஜல் அகர்வாலின் பாத்திர வார்ப்பில் இருந்து தொடங்குகிறது. மூலக்கதையில் இருக்கும் கதாபாத்திரத்தின் தொழிலை மாற்றியது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் இந்தக் கதாபாத்திரம் தவறான நபர்களைப் பிரிக்கிறதா அல்லது சரியான நபர்களைப் பிரிக்கிறதா என்கிற குழப்பம் நமக்கு மட்டும் அல்லாது காஜல் அகர்வாலுக்கே வந்துவிடுகிறது. மன நல மருத்துவரா இல்லை ஒரிஜினலைப் போல ‘Cassanova’ கதாபாத்திரமா என்கிற கேள்வியும் உடன் தொத்திக்கொள்கிறது.

இது போதாதென, சோக காட்சிகளைத் தவிர பிற காட்சிகளில் எந்தவித எமோஷனலும் இல்லாமல் நடித்துக்கொடுத்திருக்கிறார் காஜல். அதனாலேயே இரண்டாம் பாதியில் தெரிந்த முடிவுக்கு ஏன் இவ்வளவு இழுவை என்றாகிவிடுகிறது. அதே போல், தவறு துல்கர் பக்கம் என்றால் ஏன் அதற்கும் அதிதி கசிந்துருகி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிற குழப்பமும் எழுகிறது. துல்கருக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்து இருந்தாலே எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைத்திருக்குமே என்கிற நிலையில் இதற்கு ஏன் இப்படியான சூன்யம் வைக்கும் காட்சிகள் எல்லாம் என யோசிக்க வைக்கிறது.

காஜலின் கதாபாத்திரத்தையும், இரண்டாம் பாதியையும் இன்னும் சிரத்தையுடன் அணுகியிருந்தால், நாமும் ‘ஹே சினாமிகா’ என ரொமாண்டிக்காக மாறியிருக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.