உட்கட்சி குஸ்தி: அதிகாரபூர்வ வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றிபெற்ற திமுக-வினர்! நடந்தது என்ன?!

திருவண்ணாமலை மாவட்டம், 4 நகராட்சிகளையும், 10 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்று முடிந்தது. மொத்தம் 27 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகராட்சியில், தி.மு.க -18, அ.தி.மு.க-3, பா.ம.க-2, சுயேச்சை-3, காங்கிரஸ்-1 ஆகிய இடங்களில் முறையே வெற்றிபெற்றன. சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளை பிடிப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மையான கவுன்சிலர்களை தன்வசம் கொண்டிருந்தது தி.மு.க கூட்டணி. இதனால் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளை தி.மு.க கூட்டணியே கைப்பற்றும் என உறுதியாக நம்பப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த சேர்மன் பதவியை பிடிப்பதற்கு நகரச் செயலாளர் மோகனவேல் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. துணை சேர்மன் பதவியை பிடிப்பதற்கு 7-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பேபி ராணிக்கும், 15-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் குல்சார் என்பவருக்கும் இடையே போட்டியிருந்து வந்தது.

மறைமுகத் தேர்தல்

இந்த நிலையில், திருவத்திபுரம் நகராட்சியில் சேர்மன் வேட்பாளராக விஸ்வநாதன் என்பவரையும், துணை சேர்மன் வேட்பாளராக பேபி ராணி என்பவரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது தி.மு.க தலைமை. இதனால் மோகனவேல் மற்றும் குல்சார் தரப்பினர் அப்செட்டில் இருந்து வந்துள்ளனர். இந்த உட்கட்சி பரபரப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் அதிகாரப்பூர்வ தி.மு.க வேட்பாளர் விஸ்வநாதனுக்கு போட்டியாக தி.மு.க நகரச் செயலாளர் மோகனவேல் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இந்தச் சம்பவம் திருவத்திபுரம் தி.மு.க கட்சியினருக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.

அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிகாரப்பூர்வ தி.மு.க வேட்பாளரான விஸ்வநாதனை எதிர்த்துப் போட்டியிட்ட மோகனவேல் 16 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஸ்வநாதன் 11 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். தி.மு.க கூட்டணி 19 கவுன்சிலர்களை தன்வசம் வைத்திருந்த போதிலும், 11 வாக்குகள் மட்டுமே அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு பதிவாகியுள்ளது. இதன் மூலம் மாற்றுக் கட்சி கவுன்சிலர்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட தி.மு.க கவுன்சிலர்களின் ஆதரவுடன் நகரச் செயலாளர் மோகனவேல் வெற்றி பெற்றிருப்பது வெளிச்சமாகிறது. இந்தச் செயல் தி.மு.க கட்சிக்குள் குழப்பத்தை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் எ.வ.வேலு, தரணிவேந்தன்

“2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது செய்யாறு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்ததால், அதற்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தாராம் மோகனவேல். இதனால் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தரணிவேந்தனின் அதிருப்தியை மோகனவேல் சம்பாதித்தாகக் கூறப்படுகிறது. ஆரணி, வந்தவாசி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் நகரச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு சேர்மனாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், திருவத்திபுரம் நகராட்சியில் மட்டும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மாவட்ட வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கு சீட் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தனக்கு சீட் மறுக்கப்பட்டதாலும், உட்கட்சி குஸ்தியாலும் தலைமையின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து மோகனவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பேபிராணி, குல்சார்

இது ஒருபுறமிருக்க, அதே நகராட்சியில் துணை சேர்மன் பதவிக்காக அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளரையும் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் மற்றொரு தி.மு.க கவுன்சிலர் ஒருவர்.

நேற்று மதியம் நடைபெற்ற துணை சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தலில், 7-வது வார்டு கவுன்சிலர் பேபிராணி தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து 15-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் குல்சார் வேட்புமனுத்தாக்கல் செய்தார். மறைமுகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், குல்சார் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை விட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

உட்கட்சி குஸ்தியின் வெளிப்பாடாக தி.மு.க தலைமை அறிவித்த சேர்மன் மற்றும் துணை சேர்மன் வேட்பாளர்களை தோற்கடித்து தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே பதவிகளை எட்டிப்பிடித்துள்ள சம்பவம் திருவத்திபுரம் தி.மு.க-வில் புகைச்சலை அதிகரித்திருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்

இது தொடர்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தரணி வேந்தனிடம் பேசினோம். “மோகனவேலுக்கு சேர்மனாக போட்டியிட சீட் வழங்கக் கூடாது என்பது எங்களின் நோக்கமல்ல. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஒருவருக்கும் சீட் தர வேண்டும் என்றுதான் சீட்டு ஒதுக்கப்பட்டது. கூட்டணிக் கட்சியின் தர்மத்தை மீறி பதவியைப் பிடித்தவர்களை தற்போது ராஜினாமா செய்யச் சொல்லி நடவடிக்கை எடுத்து வருகிறார் தளபதி. அடுத்ததாக உட்கட்சிக்குள் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் மீதும் கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார் சுருக்கமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.