நாடு சவால்களை சந்திக்கும்போது எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயத்தை தேடுகின்றனர்- பிரதமர் மோடி

403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ந் தேதி நடந்தது. தொடர்ந்து பல்வேறு தேதிகளில் 2 முதல் 6 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தது.

உ.பியின் அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சண்டௌலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மார்ச் 7ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், உ.பி வாரணாசியில் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

கண்மூடித்தனமான எதிர்ப்பு, தொடர்ச்சியான எதிர்ப்பு, கடுமையான விரக்தி, எதிர்மறை என்பது எதிர்க்கட்சிகளின் அரசியல் சித்தாந்தமாகிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக, 80 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. உலகமே வியந்து நிற்கிறது. ஏழைகள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசத்தின் முன் சில சவால்கள் எழும்போது, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் அரசியல் ஆதாயத்தைத் தேடுகிறார்கள். இந்தியாவின் பாதுகாப்புப் படைகளும், மக்களும் நெருக்கடியை எதிர்த்துப் போராடும்போது, அவர்களின் நிலைமையை மிகவும் சிக்கலானதாக மாற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள். கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் நெருக்கடியின் போது இதைப் பார்க்கிறோம்.

வீட்டில் கழிப்பறை இல்லாத ஏழைத் தாய் படும் கஷ்டம் அரண்மனைகளில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. சூரிய உதயத்திற்கு முன் இயற்கையின் அழைப்பிற்கு செல்வது பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும் அல்லது நாள் முழுவதும் வலியை தாங்கிக்கொண்டு சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மட்டுமே செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
உக்ரைனில் இருந்து 63 விமானங்கள் மூலம் 13,300 இந்தியர்கள் மீட்பு- மத்திய அரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.