“நீங்க எங்களுக்கு கெடச்ச பொக்கிஷம்!" – தஞ்சை மாநகராட்சி ஆணையரை பாராட்டி நெகிழ்ந்த மேயர்

தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த சண்.இராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என மேயரும், தஞ்சையின் பொக்கிஷம் என துணை மேயரும் ஆணையரை பாராட்டி வாழ்த்தி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் திமுக மேயர் சண்.இராம நாதன்,ஆணையர் சரவணக்குமார்

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில், தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் 40 வார்டுகளிலும், அ.தி.மு.க 7 இடங்களிலும், சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும், பா.ஜ.க , அ.ம.மு.க தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து மாநகராட்சின் மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் சண்.இராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி அறிவிக்கப்பட்டனர். பின்னர், நேற்று நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர்.

அதைத் தொடர்ந்து சண்.இராமநாதனிடம் வெற்றிக்கான சான்றிதழை ஆணையர் சரவணக்குமார் வழங்கினார். பின்னர் புதிதாகப் பொறுப்பேற்ற அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் மேயர் மற்றும் துணை மேயரை வாழ்த்தியதுடன் அதற்கு இணையாக ஆணையரையும் வாழ்த்தினர். அத்துடன் மேயருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவரும் தேர்தலை நியாயமான முறையில் நடத்தியதாகக் கூறி ஆணயருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

துணை மேயரான டாக்டர் அஞ்சுகம் பூபதிக்கு சால்வை அணிவிக்கும் சண்.இராமநாதன்

மேயராகப் பொற்றுப்பெற்று கொண்ட சண்.இராமநாதன் பேசுகையில், “தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சிறந்த ஆணையர் கிடைத்திருக்கிறார் நான் ஏற்கெனவே ஆணையரை ஹக் செய்யணும் என்று சொல்லியிருந்தேன். இப்போது ஹக் செய்து கொள்கிறேன். ஆணையர் சரவணக்குமார் நமக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். நேர்மையான சிறந்த அதிகாரி. நான் மேயராக இருக்கும் வரை ஆணையராக இருந்து நீங்கள் தான் வழி நடத்த வேண்டும், உங்களோடு நாங்களும் பணி புரிய வேண்டும்” என்றார்.

பின்னர் பேசிய அஞ்சுகம் பூபதி, “பணியைத் தொடங்கிய நாள் முதல் தற்போது தேர்தல் நடத்தி முடித்திருப்பது வரை ஒரு அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும், நியாயமாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆணையர் சரவணக்குமார் செயல்பட்டுள்ளார். எதற்கும் அஞ்சாமல் தனிச் சிறப்பு மிக்க மனிதராக இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறார். பழமை வாய்ந்த தஞ்சாவூர் மாநகராட்சியின் பொக்கிஷமாக இருக்கிறார். நேர்கொண்ட பார்வையுடன் செயல்படுகிறார். ஆணையரை போலவே நான் உட்பட மாமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இருப்போம். மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற நீங்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

சண். இராமநாதன்,
ஆணையர் சரவணக்குமார்

தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையர் சரவணக்குமார் தனது நேர்மையான நடவடிக்கையாலும், அதிரடியான செயல்களாலும் பணிக்கு வந்து குறைந்த மாதங்களிலேயே தஞ்சை மக்களின் நெஞ்சை கொள்ளைக் கொண்டார். ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட பலவற்றில் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அதிரடி காட்டினார். தஞ்சையின் வளர்சிக்காக தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியதை வெளியூரிலிருந்து வந்த ஆணையர் செய்து கொண்டிருக்கிறார். அவரது பணியை யாரும் தடுக்காமல் இருந்தாலே ஊர் பெரிய வளர்ச்சியடையும் என தஞ்சை மக்கள் ஏற்கெனவே பேசிவந்தனர்.

இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி பலரும் ஆணையரை பாராட்டி பேசி விட்டு சென்றனர். இதே போல மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற கவுன்சிலர்கள் என கட்சி பாகுபாடின்றி பலரும் அவரை பாராட்டி வாழ்த்தியது அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என மாநகராட்சி ஊழியர்கள் நெகிழ்ந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.