போலந்தில் அமெரிக்க துருப்புகள் 2 மடங்காக அதிகரிப்பு- வெளியுறவுத்துறை மந்திரி தகவல்

வார்சா:
உக்ரைன்  மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் அண்டை நாடான போலந்துக்கு அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். நேட்டோ உறுப்பு நாடான போலந்து, அவர்களை வரவேற்று தேவையான உதவிகளை செய்து வருகிறது. அதேசமயம் பாதுகாப்பு விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. 
இந்நிலையில், போலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், போலந்து பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேசினார். உக்ரைன் எல்லை அருகில் உள்ள நகரில் இந்த சந்திப்பு நடந்தது. இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
அப்போது பேசிய ஆன்டனி பிளிங்கன், போலந்தில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை ஜனவரி உடன் ஒப்பிடுகையில் 2 மடங்காக அதிகரித்துள்ளதாகவும், தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருப்பதாகவும் போலந்து மந்திரியிடம் கூறினார். மேலும், ரஷியாவின் செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுத்து வரும் போலந்துக்கு பாராட்டு தெரிவித்தார். 
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு கற்பனை செய்ய முடியாத அளவிலான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், போலந்துக்கு ஏற்கனவே 7,00,000 பேர் அகதிகளாக வந்துள்ளதாகவும் போலந்து வெளியுறவுதுறை மந்திரி குறிப்பிட்டார்.
போலந்து-உக்ரைன் எல்லையையும் பிளிங்கன் பார்வையிட்டார். மேலும், எல்லையில் கோர்சோவா பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத ஷாப்பிங் மாலில் அகதிகளைச் சந்தித்து பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.