முன்னாள் அமைச்சர்… 23 ஆண்டுகள் மாவட்டச் செயலாளர் – குமரி சுரேஷ்ராஜன் பதவிநீக்கப் பின்னணி இதுதான்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சுமார் 23 ஆண்டுகள் பதவி வகித்தவர் சுரேஷ்ராஜன். 1996-ல் எம்.எல்.ஏ ஆகி இளம் வயது அமைச்சராக வலம்வந்தார் இவர். முதலில் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர், பின்னர் 1998-ல் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரானார். நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் சுரேஷ்ராஜனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என அறியப்பட்ட சுரேஷ்ராஜனிடம் இருந்து திடீரென மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பது அவர் ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதற்கான காரணம் குறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தோம்.

“கடந்த சட்டசபைத் தேர்தலின்போது நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தியிடம் வெற்றியை பறிகொடுத்தார் சுரேஷ்ராஜன். தொகுதி வீக்காக இருக்கிறது விழித்துக்கொள்ளுங்கள் என கட்சித் தலைமை கடைசி நேரத்தில் எச்சரித்திருக்கிறது. ஆனாலும் அதை பொருட்படுத்ததாதால் சட்டசபைத் தேர்தலில் சுரேஷ்ராஜன் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் மனோதங்கராஜ்

சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் வென்ற ஒரே தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆனார். அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநகரச் செயலாளராக இருந்த மகேஷ் கலந்துகொண்டார். மனோதங்கராஜூக்கும், சுரேஷ்ராஜனுக்கும் ஏற்கெனவே கோஷ்டி மோதல் இருந்தது. அதனால், அமைச்சர் மனோதங்கராஜ் நிகழ்ச்சிகளில் மகேஷ் கலந்துகொள்வது சுரேஷ்ராஜனுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலில் வென்று மகேஷ் மேயரானால், மா.செ சுரேஷ்ராஜனுக்கு இன்னும் நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் மகேஷை தோற்கடிக்க சில உள்ளடி வேலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதை அவ்வப்போது கட்சித் தலைமைக்கு மகேஷ் தரப்பு கொண்டுசென்றுள்ளது. அதனால்தான், தேர்தலின் கடைசி சமயத்தில் தலைமையின் அறிவுறுத்தல்படி பூச்சிமுருகன் நாகர்கோவிலில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டார். மேலும், கோஷ்டி பூசல் சம்பந்தமாக சுரேஷ்ராஜனிடமே நேரடியாக பேசவும் செய்திருக்கிறார் பூச்சிமுருகன்.

நாகர்கோவில் மாநகர மேயராக பதவியேற்ற மகேஷ்

இறுதியாக நேற்று நடந்த மேயர் தேர்தலில் தி.மு.க அணியைச் சேர்ந்த சில கவுன்சிலர்கள் பா.ஜ.க-வுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். அதேபோல, மதியத்துக்கு மேல் நடந்த துணை மேயர் தேர்தலில் சுரேஷ்ராஜன் ஆதரவாளர் எனக்கூறப்படும் ராமகிருஷ்ணன் பா.ஜ.க ஆதரவோடு போட்டியிட்டார். இதெல்லாம் உடனுக்கு உடன் கட்சித் தலைமைக்கு சென்றதால் கோபமான முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சுரேஷ்ராஜனிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவியை பறித்துள்ளதாகக் கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். பா.ஜ.க-வின் நெருக்கடி, சொந்தக் கட்சியின் குடைச்சல் என பலவற்றை சமாளித்து நாகர்கோவில் மேயர் பதவியைக் கைப்பற்றிய மகேஷுக்கு இன்ப அதிர்ச்சியாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியை தி.மு.க தலைமை வழங்கியிருக்கிறது” என்றனர்.

அதே சமயம், “ஆதரவாளர்கள் செய்த தவறால் இப்படி ஆகிவிட்டது” என்கிறார்கள் சுரேஷ்ராஜன் தரப்பினர்.

தனது முகநூலில், `அநீதி வீழும் அறம் வெல்லும்’ என்ற வாசகத்தை மட்டுமே பதிவு செய்துள்ள சுரேஷ்ராஜன், இதுபற்றி மீடியாக்களிடம் எதுவும் பேசவில்லை. தன் ஆதரவாளர்களிடமும் மீடியாக்களிடம் பேசவேண்டாம் என கூறியுள்ளாராம். குமரி மாவட்டத்தில் தி.மு.க-வின் முக்கிய முகமாக இருந்த சுரேஷ்ராஜனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, அவர் ஆதரவாளர்க்ள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.