2 நகரங்களில் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு| Dinamalar

லீவ்:மக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் மரியு போல் மற்றும் வோல்னவோகா நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து உள்ளது. சில நகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.மின்சாரம் தடைஉக்ரைனின் தென்கிழக்கே உள்ள துறைமுக நகரான மரியுபோல் மற்றும் கிழக்கே உள்ள வோல்னவோகாவில் ரஷ்யப் படைகள் ஆக்ரோஷமாக போரில் ஈடுபட்டுஉள்ளன. பல இடங்களில் குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசிஉள்ளது.

ஏற்கனவே கடும் குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மின்சாரம் தடைபட்டு உள்ளது. தொலைபேசி சேவைகளும் முடங்கி உள்ளன. மருந்துகள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இந்த இரு நகரங்களில் உள்ள மக்கள் வெளியேறும் வகையில், தற்காலிகமாக போரை நிறுத்துவதாக, ரஷ்யாஅறிவித்து உள்ளது. ஆனால், இந்தப் போர் நிறுத்தம் எவ்வளவு நாளைக்கு மேற்கொள்ளப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டாலும், இந்நகரங்களில் தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதாக, உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

கண்டனம்

குறிப்பாக ராணுவ மையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந் நிலையில், உக்ரைன் வான் வழியில் விமானங்கள் பறப்பதற்கு, ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பு தடை உத்தரவு பிறப்பிக்காததற்கு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இனி உக்ரைனில் இறக்கும் ஒவ்வொருவரின் மரணத்துக்கும், நேட்டோ அமைப்பே பொறுப்பு’ என, அவர் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.

எச்சரிக்கை

ஆனால், இந்த தடையை விதித்தால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் அபாயம் உள்ளதாக, நேட்டோ அமைப்பு கூறியுள்ளது.இந்நிலையில், ‘விரைவில் போர் முடிவுக்கு வராவிட்டால், உக்ரைனில் உணவுப் பஞ்சம் ஏற்படும்’ என, ஐ.நா., உலக உணவு திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கிடையே, மனிதநேய அடிப்படையிலான நிவாரண உதவிகளுக்கு, 76 ஆயிரம் கோடி ரூபாய் தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

‘உக்ரைனில் இருக்கும், 1.2 கோடி மக்களுக்கும், அண்டை நாடுகளுக்கு தப்பியுள்ள 40 லட்சம் மக்களுக்கும் மனிதநேய உதவிகள் தேவைப்படும்’ என, ஐ.நா., கணக்கிட்டுள்ளது. உக்ரைன் நிலவரம் குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நாளை நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

பொறுமை அவசியம்

உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அண்டை நாடுகளுக்கு வரவழைக்க பட்டு விமானம் வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள, உக்ரைனின் சுமி நகரில் வசிக்கும் இந்திய மாணவர்கள், ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டுஉள்ளனர். அதில், வேறு வழியில்லாமல், ரஷ்ய எல்லைக்கு உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யப் போவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளதாவது: போரை நிறுத்துவதற்கு, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுத்து வருகிறோம். அதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பொறுமையுடனும், எவ்வித விபரீத முயற்சியிலும் ஈடுபடாமலும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.