அதிமுக: “இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்னையில் கருத்து சொல்ல விரும்பவில்லை!” -டிடிவி தினகரன்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அமமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் நேற்று முன்தினம் (04.03.2022) இரவு கலந்துகொண்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். நேற்று காலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் உரையாடியுள்ளார். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “அதிமுக கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்னையை எட்டி பார்த்து கருத்து சொல்வதற்கு நான் விரும்பவில்லை.

சசிகலா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

எனது பெயரும், அமமுக பெயரும் அந்த தீர்மானத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் செய்தியாளர்களை பார்த்தபோது இருந்தது. தேனியில், நிறைவேற்றிய தீர்மானத்தை யாரோ ஒருவர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதை நேற்று இரவு 9.30 மணியளவில் பார்த்தேன். எனக்கே அதை பற்றி ஒன்றும் தெரியவில்லை. எதற்காக இந்த மாதிரியான நிகழ்வுகள் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது என்று…! இது சுயபரிசோதனையின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அங்கு சேர்ந்து பண்ணியிருக்கிறார்கள்.

இதை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை என ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதிமுக ஒட்டுமொத்தமாக ஒருமித்த கருத்தை முடிவெடுத்து சொன்ன பின்னர்தான் அதைப்பற்றி பதில் சொல்ல முடியும். அதனால் நான் இதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம், காலம் அதற்கெல்லாம் சரியான நிலையை உருவாக்கும்.

நிச்சயம் இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்சேதம் ஏதுமின்றி மத்திய அரசு பாதுகாப்பாக மீட்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.