இன்னைக்கு இருக்குற அரசியல் நமக்கு செட் ஆகாது; மொக்கச்சாமி முருகன்

பகை பேசிய சுப்ரமணியபுரம் படத்தில் நகைச்சுவை ஊட்டிய கதாபாத்திரம்… மொக்கச்சாமி. படம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்தும் மொக்கச்சாமி நினைவுகூரப்படுகிறார்; ஆனால், அப்பாத்திரம் ஏற்று நடித்த முருகன்…

'எல்லாரும் மறந்துட்டாங்களே'ன்னு வருத்தம் இருக்காய்யா?
ஏய்… என்னப்பா பேசுறே! புதுசா கல்யாணமான ஒரு பொம்பள புள்ள கோவில்ல என்னைப் பார்த்ததும் எம்புட்டு வெட்கப்பட்டுச்சு தெரியுமா; 'சுத்த பத்தமா இருக்கீங்களா'ன்னு பார்க்குற இடத்துல எல்லாம் இளவட்டப் பயலுவ லந்தை கொடுக்குறாய்ங்க; அடுத்தடுத்து வாய்ப்பு இல்லைன்னாலும் ஜனங்க என்னை மறக்கலைப்பா!

மொக்கச்சாமி அடையாளத்தோட அரசியல் களத்துல குதிச்சிருக்கலாமே…
ம்ஹும்… நானெல்லாம் அண்ணாதுரை காலத்துலேயே தி.மு.க.,வுல இருந்தவன். நான் பார்க்காத மேடையா, மாநாடா, தேர்தல் வேலையா; அடப்போப்பா… 'அம்மா' இல்லாம அரசியலே புடிக்கலை; இன்னைக்கு இருக்குற அரசியல் நமக்கு செட் ஆகாது!

இந்த முருகன் யாரு?
அப்பா காலத்து வாழை இலை வியாபாரம் பார்த்து 5 பொம்பள புள்ளைகளை கட்டிக் கொடுத்த உழைப்பாளி; மொக்கச்சாமி கடைவாய்ல ராசாத்தி இடிக்குற காட்சியைப் பார்த்து கோவிச்சுக்கிட்ட வீட்டுக்காரிக்கு, 'அது சினிமா'ன்னு புரிய வைச்சு சமாதானப்படுத்த தெரிஞ்ச நல்ல புருஷன்!

நல்ல அறிமுகம் கிடைச்சும் முழுநேர சினிமாக்காரர் ஆக தடுக்குறது எது?
வேறென்ன… எல்லாம் பணம்தான். தினமும் மாட்டுத்தாவணி சந்தையில வியாபாரம் பார்த்து வீட்டு வாடகை கட்டுறேன். சினிமா மூலமா நாலு காசு பார்த்து சொந்த வீடு கட்டணும்னு ஆசை; அந்த மீனாட்சி தான் சசிகுமார் மூலமா மறுபடியும் ஒருவழியை காட்டணும்!

மாசி போயி பங்குனி வந்தா ஐயாவுக்கு வயசு?
இங்க பாருப்பு… கடைக்கு வா, சாப்பிடு, பழகு, போ; இந்த வயசு கேட்குற வேலை எல்லாம் வேணாம்! நான் சினிமாவுல அடுத்த ரவுண்டு வரணுமப்பா; ஆளை வுடு… நான் கிளம்புறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.